வழக்கமாக க்ரைம், த்ரில்லர் பாணி கதைகளைப் படமாக்கும் இயக்குநர் மாறன், ஃபேமிலி என்டர்டெயினரோடு வந்திருக்கிறார், ‘அப்பா குட்டி’யில். விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ராணி முதன்மைப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவ.6-ல் ரிலீஸ் ஆக இருக்கிறது. வித்தியாசமான கதைகளைக் கொண்ட சமீபத்திய திரைப்படங்கள் கொடுத்திருக்கும் வெற்றியால் நம்பிக்கையோடு இருக்கிறார், இயக்குநர் மாறன். ‘அப்பா குட்டி’ பற்றி பேசினோம் அவரிடம்.
க்ரைம் த்ரில்லரை விட்டுட்டு குடும்பக் கதைக்கு வந்ததுக்கு ஏதாவது காரணம் இருக்கா?
இயக்குநர் அப்படின்னா, எல்லா வகையான கதைகளையும் பண்ணணும் தானே. க்ரைம் கதைதான் இயக்கணும்னு என்னை நானே பிராண்ட் பண்ணிக்க விரும்பலை. நிறைய பேர், ‘க்ரைம் கதைகளையே பண்ணிட்டு இருக்கீங்களே?’ன்னு உங்களை மாதிரி பலர் கேட்கிறாங்க. அதனால ஒரு மாற்றத்துக்காக ஆக் ஷன் கலந்த ‘ஃபேமிலி என்டர்டெயினர்’ கதையை உருவாக்கினேன். இதுக்குள்ளயும் த்ரில்லருக்கான கூறுகள் இருக்குது. பார்வையாளர்கள் ரசிக்கிற அளவுக்கு புதிய விஷயங்கள் படத்துல நிறைய இருக்கும்.
விஜய் ஆண்டனியை கதைக்குள்ள எப்படி கொண்டு வந்தீங்க?
இந்தக் கதையை ஒரு தயாரிப்பு நிறுவனத்துல இருந்தவங்ககிட்ட சொன்னேன். அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அவங்க, ‘இதுல விஜய் ஆண்டனி நடிச்சா நல்லாருக்கும், நானே அவரை கதை கேட்கச் சொல்றேன்’னு சொன்னாங்க. அவர், அவங்களுக்கு நண்பர். அவங்களே அவருக்கு போன் பண்ணி, ‘ஒரு நல்ல கதை இருக்கு, உங்களுக்கு செட் ஆகும், கேட்கிறீங்களா?’ன்னு சொன்னாங்க.
அவர் ‘கேட்கிறேன், வரச் சொல்லுங்க’ன்னார். சொன்னேன், முதல் பாதி சொன்னதுமே ‘நல்லாருக்கு, பண்ணலாம்’ன்னு சொல்லிட்டார். பிறகு அடுத்த பாதியை சொன்னதும் அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ‘உடனே பண்ணலாம், நானே தயாரிக்கிறேன்’னும் சொன்னார். அப்படித்தான் இந்தப் படம் தொடங்குச்சு.
அப்பா- மகள் கதைதானா?
ஆமா. அப்பாவுக்கும் மகளுக்குமான உணர்வுப்பூர்வமான கதை. தந்தை - மகளுக்கு இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டது இந்தப்படம். படத்துல விஜய் ஆண்டனி, சினிமா புரொடக் ஷன் மேனேஜரா வர்றார். ஆனா, இது சினிமா பற்றிய கதை இல்லை. இந்தப் படத்தோட கதை, சென்னை மற்றும் ஊட்டியில நடக்குது. தேவையான ஆக் ஷன், ஃபேமிலி டிராமா, காமெடி எல்லாம் இருக்கும்.
பார்வையாளர்கள், தங்களை படத்தோட தொடர்பு படுத்தி பார்த்துக்கறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. ஒரு வகையில ‘பிச்சைக்காரன்’ படத்தை இந்தப் படத்தோட கொஞ்சம் தொடர்புப் படுத்திப் பார்த்துக்கலாம். அதுல அம்மாக்காக, தன் வாழ்க்கையை பணயம் வைப்பார் ஹீரோ. இதுல தன் பொண்ணுக்காகப் பண்றார். அது என்னங்கறது தான் படம். ஹீரோவா நடிச்சிருக்கிற விஜய் ஆண்டனியே இசையும் அமைச்சிருக்கார்; எடிட்டிங்கும் அவர்தான். மொத்தம் 3 பாடல்கள். ரொம்ப அருமையா வந்திருக்கு. இந்த வருட ஹிட் லிஸ்ட்ல இந்தப்பாடல்கள் கண்டிப்பா இருக்கும்.
இதுல நாயகியா நடிச்சிருக்கிற பிரீத்தி அஸ்ராணி, சிறந்த கதாபாத்திரங்கள்ல நடிச்சுட்டு வர்றாங்க...
உண்மைதான். இதுலயும் அப்படித்தான். கதையில அவருக்கும் முக்கியத்துவம் இருக்கு. விஜய் ஆண்டனி, மனைவியா வர்றாங்க. அவங்களுக்கு ஓர் அழகான காதல் கதை இருக்கு. அந்த எபிசோடு சிறப்பா இருக்கும். வழக்கமா, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்காங்கன்னு சில நடிகைகளை சொல்வோம் இல்லையா, இதுல பிரீத்தி, நிஜமாகவே அப்படித்தான் மாறியிருக்காங்க. சிறந்த நடிகை. இந்தப்படம் அவங்களுக்கு ஸ்பெஷலானதா இருக்கும். ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்கும் கதையில அவங்களுக்கு முக்கியத்துவம் இருக்கு. இவங்களோட மகளா ‘ஜனநாயகன்’-ல நடிச்ச பேபி லிதன்யா நடிச்சிருக்காங்க.
படத்துல நிறைய நட்சத்திரப் பட்டாளம் இருக்கே?
இந்தக் கதைக்கு அவ்வளவு பேர் தேவைப்பட் டாங்க. பகவதி பெருமாள், ஹரிப்பிரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஜென்சன் திவாகர், லிசி ஆண்டனி, மூணார் ரமேஷ், முருகானந்தம்னு பலர் நடிச்சிருக்காங்க. எல்லோருக்கும் கதையில முக்கியத்துவம் இருக்கும்.