தமிழ் சினிமா

அனிருத் சர்வதேச அளவில் உயரங்களை எட்டுவார்: மிஷ்கின்

ஸ்டார்க்கர்

அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன், சர்வதேச அளவுக்கு போவார் என இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

          

இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ராம், மிஷ்கின், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும் போது, “இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன்.

பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன். தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.

விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர். விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். ஒரு இயக்குநர் தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்தப் படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.

இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்தப் படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியாது.

விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன். சர்வதேச அளவுக்கு போவார். பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார்.

மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார். எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை” என்று பேசினார் இயக்குநர் மிஷ்கின்.

SCROLL FOR NEXT