சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்துக்கு அனிருத் திடீரென வருகை தந்து படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘அரசன்’. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு, டிசம்பரில் படப்பிடிப்புத் தொடங்கியது. இடையில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் திடீரென வருகை தந்த வீடியோ ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள வீடுயோவில், படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும் காரில் இருந்து அனிருத் இறங்குகிறார். அவரை படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சென்று வரவேற்கிறார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் சென்று வரவேற்கிறார்.
பின்பு வெற்றிமாறனும் அனிருத்தும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, படத்தின் கதாநாயகன் சிம்பு வந்து அந்த உரையாடலில் கலந்துகொள்கிறார். சிறிது நேரம் கழித்து தயாரிப்பாளர் தாணுவும் அந்த உரையாடலில் கலந்து கொள்கிறார்.
இத்துடன், ‘அரசன் படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்த ராக் ஸ்டார் அனிருத். சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் உற்சாகத்துடன் படப்புடிப்பு நடந்து கொண்டிருக்கிறது’ என்றும் பதிவிட்டுள்ளார்.
வெற்றிமாறனின் ‘வட சென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிலம்பரசன் மூன்று வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.