விஜய்க்கு ‘பகவந்த் கேசரி’ மிகவும் பிடித்த படம் என்று அதன் இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.
’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்பது ட்ரெய்லர் வெளியான உடனே உறுதியாகிவிட்டது. இதனால் பலரும் அப்படத்தின் காட்சிகளை வைத்து கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.
தற்போது அனில் ரவிபுடி அளித்த பேட்டியொன்றில் ‘ஜனநாயகன்’ தொடர்பாக, “விஜய்க்கு ‘பகவந்த் கேசரி’ படம் மிகவும் பிடித்திருந்தது. மேலும், தனது கடைசிப் படத்தினை இயக்குவது தொடர்பாக பேசினோம். ஆனால் அவருக்காக எந்தவொரு படத்தின் ரீமேக்கையும் நான் செய்ய விரும்பவில்லை. ஒரு நேரடி படம் பண்ணலாம் என்று கதையும் கூறினேன். அவரை ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் சந்தித்து பேசினேன். அது ஒரு இனிமையான சந்திப்பாக அமைந்தது.
‘ஜனநாயகன்’ படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அப்படத்தின் ஆரம்ப 20 நிமிடங்கள், இடைவேளை, 2-ம் பாதியில் சில பகுதிகள் மட்டுமே எடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படை கதையம்சத்தினை மாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தின் பின்புலத்தினை முழுமையாக மாற்றி ரோபோ சார்ந்த அறிவியல் கதையாக கூறியிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு அதுவொரு புதுமையான களமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.