தமிழ் சினிமா

அம்மா சென்​டிமென்டை ஆழமாகச் சொன்ன படம் ‘அம்மா’

செய்திப்பிரிவு

மலை​யாள சினி​மா​வின் முதல் சூப்​பர் ஸ்டார் திக்​குரிசி சுகு​மாரன். சுமார் 700 படங்​களுக்கு மேல் நடித்​திருக்​கும் அவர், வாங்​கி​யிருக்​கும் விருது பட்​டியலே மீக நீள​மானது. சில படங்​களை இயக்​கி​யும் உள்ள அவர் நடித்​து, தமிழ், மலை​யாளத்​தில் உரு​வான படம், ‘அம்​மா’. அம்​மா​வின் தியாகத்​துக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து உரு​வான இப்​படத்​தைத் தயாரித்​தவர் டி.இ.​வாசுதேவன். இவர், அப்​போது தமிழ்ப் படங்​களை, தனது அசோசி​யேட்​டட் பிக்​சர்ஸ் சார்​பில் கேரளா​வில் விநி​யோகித்து வந்​தார்.

அப்​போது தமிழ்​நாட்​டைச் சேர்ந்த சில தயாரிப்​பாளர்​களு​டன் பழக்​கம் ஏற்​பட்​டது. அவர்​கள் உதவி​யுடன் தயாரிப்​பாளர் ஆக முடிவு செய்​தார், வாசுதேவன். அப்​படி அவர் தயாரித்த முதல்திரைப்​படம், ‘அம்மா’. கே.வேம்பு இயக்​கி​னார். திக்​குரிசி சுகு​மாரன் ஹீரோ​வாக நடித்த இப்​படத்​தில் திரு​வி​தாங்​கூர் சகோ​தரி​களில் ஒரு​வ​ரான, லலிதா நாயகி​யாக நடித்​தார். அப்​போது தமிழிலும் லலிதா பிரபல​மானவ​ராக இருந்​த​தால் தமிழிலும் படத்தை உருவாக்​கினர். அம்​மா​வாக ஆரன்​முளா பொன்​னம்மா நடித்​தார்.

லட்​சுமி (ஆரன்​முளா பொன்​னம்​மா) தனது மகன் வேணு (திக்​குரிசி), மகள் சாரதா (பி.எஸ்​.சரோஜா) ஆகியோரை வளர்க்​கப் பொருளா​தார ரீதி​யாகப் போராடு​கிறார். மேற்​படிப்​புக்​காக சென்​னை செல்​லும் மகன் வேணு, பணக்​கார தொழில​திபரின் மகள் ராதாவை (லலி​தா) காதலிக்​கிறார். படிப்பை முடித்​து​விட்டு திரும்​பும் வேணு, அம்​மா​விடம் தனது காதல் கதையை சொல்​கிறார்.

சமூக அந்​தஸ்தை காரணம் காட்டி மறுக்​கும் லட்​சுமி, ஒரு கட்​டத்​தில் மகனுக்​காக ராதா​வின் வீட்​டில் பெண் கேட்​கிறார். ராதா​வின் பணக்​காரத் தந்தை அவமானப்​படுத்​து​வதால், மனம் உடைகிறார். இதற்​கிடையே, ராதா​வும் வேணுவும் வீட்​டுக்​குத் தெரியாமல் திரு​மணம் செய்​து​கொள்​கிறார்​கள். லட்​சுமி, அவர்​களுக்கு அடைக்​கலம் கொடுக்​கிறார்.

வேணுவுக்கு சென்​னை​யில் வேலை கிடைக்​கிறது. கிராம வாழ்க்கையை சமாளிக்க முடி​யாமல் ராதா​வும் சென்னை செல்​கிறார். மகனின் படிப்பு செல​வுக்​காக வாங்​கிய கடனுக்​காக வீட்டை விட்டு வெளி​யேற்​றப்​படு​கிறார், லட்​சுமி. சென்​னைக்கு வரும் அவரை, ராதா மோச​மாக நடத்​துகிறார். அஙகிருந்​தும் வெளி​யேறும் லட்​சுமி, சாலை விபத்​தைச்சந்​திக்கிறாள். வேலை செய்​யும் இடத்​தில் மகனுக்​குத் திருட்​டுப் பட்டம் கிடைக்​கிறது. பிறகு அம்மா என்ன மாதிரி​யான தியாகங்​களைச் செய்கிறார் என்று கதை போகும்.

அம்மா சென்​டிமென்டை ஆழமாகச் சொன்ன திரைப்​படம் இது. கதை எதார்த்​தத்​தில் இருந்து வில​கி​னாலும் சுவாரஸ்​ய​மாக இருப்​ப​தாக அப்​போது விமர்​சிக்​கப்​பட்​டது. இதில் எம்​.என்​.நம்​பி​யார், டி.எஸ்​.துரை​ராஜ், டி.எஸ்​.​முத்​தை​யா, பி.எஸ்​.சரோஜா, சாந்​தகு​மாரி என பலர் நடித்​தனர். தமிழ் வசனங்​களை, எழுத்​தாளர் சாண்​டில்​யன் எழு​தி​னார்.

2 மொழிக்​கும் வி.தட்​சிணா​மூர்த்தி இசை அமைத்​தார். மொத்​தம் 14 பாடல்​கள். இதில் பெரும்​பாலானவற்​றில் இந்தி சாயல் இருந்​த​தாகக் கூறப்​பட்​டது. இசை அமைப்​பாளர் தட்​சிணா​மூர்த்தி இப்​படம் மூலம் பின்​னணிப் பாடக​ராக​வும் அறி​முக​மா​னார்.

இதில், ஆரன்​முளா பொன்​னம்​மா​வின் நடிப்பு பாராட்​டப்​பட்​டது. 1952-ம் ஆண்டு இதே தேதி​யில் (டிச.6) வெளி​யான இப்​படம் தமிழ், மலை​யாளத்தில் வரவேற்​பைப் பெற்​றது.

SCROLL FOR NEXT