‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி, ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் படம் ‘ஸ்டேஷன்’. அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தில் ஏ. வெங்கடேஷ், தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், ஜெய் கிருஷ்ணா, ரமா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதை கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே.தினேஷ் குமார் தயாரிக்கிறார். அருண் ராஜ் இசை அமைக்கும் இப்படத்துக்கு சுபாஸ் பாரதி ஒளிப்பதிவு செய்கிறார்.
“காதல், குற்றம், அதிரடி கலந்த த்ரில்லர் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் கதைக்களம். மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் போலீஸ் ஸ்டேஷனை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. இதற்காக, சென்னையில் உள்ள திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” என்று படக்குழு தெரிவித் துள்ளது.