நடிகர் வினோத் கிஷண்
அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில், சந்தோஷ், சம்யுக்தா விஸ்வ நாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ள ரொமான்டிக் காமெடி ஃபேன்டஸி திரைப்படம் ‘டபுள் ஆக்குபன்சி’. பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் மாறும் ஒருவரின் கதைதான் படம். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சாம் சி.எஸ் இசை அமைத்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.
திரையரங்கங்களுக்குச் சென்றுவந்த படக்குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர். நடிகர் வினோத் கிஷண் கூறும்போது,"நான் இதற்கு முன் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். நெகட்டிவ் கதா பாத்திரத்திலும் நடித்துள்ளேன். ஆனால், இந்தப் படத்தின் கதாபாத்திரம் எனக்கு வித்தியாசமான ஒன்று. எனக்கு ரசிகர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் உண்டு.
அது கடினமான ஒன்று என்பதும் தெரியும். அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது. அதற்காக இயக்குநர் அஸ்வினுக்கு நன்றி. அவர் ஒரு ஐடியாவுடன் வந்தார். இதை எப்படிப் பண்ணப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டே ஜாலியாக நடித்தோம். இது பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி” என்றார்.