சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்துள்ள பராசக்தி படம் ஜன.10-ம் தேதி வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
இப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதை அடுத்து இதன் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன் பேசும்போது, “சுதா கொங்கரா இந்தக் கதையைச் சொன்ன போது முதலில் 2 விஷயங்கள் என் மனதிலிருந்தன. ஒரு நடிகனாகத் தமிழ் மொழியின் பெருமை பேசும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, இரண்டாவது சவாலான பாத்திரத்தில் நடிப்புத் திறமையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு.
அதனால் தான் இப்படத்தில் நடித்தேன். இயக்குநர் சுதாவை முழுமையாக நம்பித்தான் இந்தப்படத்துக்குள் போனேன். நான் ‘டாக்டர்’ படத்திலிருந்து மானிட்டர் பார்ப்பதில்லை, ஒரு இயக்குநர் பல வருடங்கள் ஒரு கதையை எழுதுகிறார். அவருக்கு எது சரி என்று தெரியும், ஒரு படத்துக்குள் போவதற்கு முன் சந்தேகம் கேட்கலாம், ஆனால் போனபின் முழுமையாக இயக்குநரிடம் ஒப்படைத்து விடுகிறேன்.
அது நடிகனாக எனக்கு உதவியாக உள்ளது. இந்தப் படத்துக்குக் கிடைக்கும் பாராட்டுகள் நாங்கள் சரியாகச் செய்துள்ளோம் என்பதை நிரூபிக்கின்றன. திரைத்துறையில் இருந்து பலர் பாராட்டினர். கமல் சார் படம் பார்த்துப் பாராட்டினார். ரஜினி சாரும் பாராட்டினார். இந்த பராசக்தியை ஸ்பெஷலாக மாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி” என்றார்.