நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தைப் போலவே மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
அதிக எதிர்பார்ப்புள்ள இப்படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் படத்தில் அவருக்கு ஆக் ஷன் காட்சிகள் இருப்பதாகவும் இப்படத்துக்காக அவர் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே அவருக்குப் பதிலாகத் தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் தரப்பில் அதை மறுத்துள்ளனர். இதே கதாபாத்திரத்துக்கு முதலில் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாவிடம் பேசினர். ஆனால், அவரும் மறுத்துவிட்டார்.