தமிழ் சினிமா

“15 ஆண்டு பயணம், போராட்டம், ஏமாற்றங்கள்...” - நடிகர் ரிஷிகாந்த் நெகிழ்ச்சி பகிர்வு

தமிழினி

சென்னை: “எனது 15 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பின் கிடைத்துள்ள மக்களிடன் அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் நன்றி” என்று ‘மொத ராத்திரி’, ‘டோரதி’க்கு கிடைத்துள்ள வரவேற்பையொட்டி நடிகர் ரிஷிகாந்த் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், “என்னுடைய 15 வருடப் பயணம் அர்த்தமுள்ளதாக இருந்தது என்று என்னை உணரவைத்த ஒவ்வொரு நல்ல உள்ளத்துக்கும், என்னுடன் இத்தனை காலமும் நின்ற ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.

பல வருடக் காத்திருப்புகள், எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள். வாழ்க்கை கற்றும் கொடுத்த பாடங்கள், ‘இன்னும் எவ்வளவு காலம்?’, ‘இந்தப் பயணம் என்னை எங்கு அழைத்துச் செல்லும்?’ என்று நான் என்னையே கேள்வி கேட்ட தருணங்கள் உண்டு.

ஆனால் இன்று, நீங்கள் என் மீது பொழிந்து கொண்டிருக்கும் அன்பையும், பாசத்தையும், ஆதரவையும் வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லுவது என்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

உங்கள் அனைவரிடம் இருந்தும் ஏராளமான மெசேஜ்கள், கமெண்ட்கள், வாழ்த்துகள், எடிட்கள், அழைப்புகள், அன்பான வார்த்தைகள் என தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக இரண்டு படங்களின் வெளியீடுகள் மற்றும் புரமோஷன்கள் காரணமாக, உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க, நன்றி சொல்ல என்னால் இதுவரை முடியவில்லை.

ஆனால், அதற்காக நான் உங்கள் அன்பை உணரவில்லை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நான் ஒவ்வொரு தருணமும் உணர்ந்திருக்கிறேன். எனக்காக நேரம் ஒதுக்கி, என்னுடன் நின்ற ஒவ்வொரு மனிதரையும், நான் மனதார மதிக்கிறேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் இந்த அன்பு என்னை உண்மையிலேயே நெகிழச் செய்கிறது. ஆனால், அந்த அன்பு என் தலைக்குள் ஏறிவிடக்கூடாது என்று நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

மாறாக, உங்கள் அன்பு என்னை முன்பைவிட அதிக பொறுப்புணர்வுடன் இருக்கச் வலியுறுத்துகிறது. என் மீது அன்பையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நீங்கள் வைக்கத் தொடங்கும்போது, அந்த அன்பை மதிப்பது என்னுடைய பொறுப்பாகிறது. அந்தப் பொறுப்பை மிகவும் பணிவுடன் சுமக்க விரும்புகிறேன்.

இனிமேல் நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இன்னும் கடினமாக உழைப்பேன். இன்னும் அதிகமாக கற்றுக் கொள்வேன். மிக முக்கியமாக, நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உங்கள் நம்பிக்கையை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

15 வருடங்களாக அங்கீகாரத்துக்காக போராடிய எனக்கு இன்று நீங்கள் கொடுத்து வரும் இந்த அன்பு மிகவும் சிறப்பானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கிறது. அதிலும் என்னை மிகவும் ஆழமாகத் தொட்ட ஒரு விஷயம். உங்கள் குடும்பங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

இன்று எனக்கு ஒரு மிகப் பெரிய குடும்பம் கிடைத்துவிட்டது என்ற உணர்வு வருகிறது. என்னுடைய பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. என் உண்மையான பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று உணர்கிறேன். இன்னும் கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்புக்கும் தகுதியானவனாக மாற தொடர்ந்து முயற்சி செய்வேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT