சென்னை: ’டோரதி’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்தவரும் அன்பு, பொறுப்பையும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்துள்ளதாக நடிகர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடிகர்கள் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும், அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை ரசிகர்கள் தருவார்கள். ‘டோரதி’ படத்த்துக்காக எனக்குக் கிடைத்து வரும் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. ‘டோரதி’ படப்பிடிப்பின்போதே, கார்த்திக் சுப்புராஜிடம், ‘உங்களுடைய பத்து படங்களிலேயே இந்தப் படம்தான் சிறந்த படமாக இருக்கும்’ என்று கூறினேன்.
ஆரம்பத்தில், இப்படத்தில் சகோதரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் என்னைத் தேர்வு செய்திருந்தார்கள். ஆனால், ‘விசில் வீரய்யா’ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டபடியே அந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது.
விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. இந்த கதாபாத்திரத்திற்காக என் தோற்றத்தை மாற்றிய மும்பையைச் சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் உட்பட, எனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்தவரும் அன்பு, பொறுப்பையும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்துள்ளது” இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
’சார்பட்டா பரம்பரை’, ‘மகான்’, ‘தாய்க்கிழவி’ படங்களில் நடித்து பிரபலமான முத்துக்குமார் ‘டோரதி’ படத்தில் விசில் வீரய்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’, அருள்நிதியின் 'டிமாண்டி காலனி2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.