நாங்கள் சென்னை ராயப்பேட்டை அம்மையப்ப முதலி தெருவில் குடியிருந்த போது (நான் பொறுப்பற்று, ரவுடித்தனமாக திரிந்து கொண்டிருந்த போது) அதே தெருவில் குடியிருந்தவர் நாராயண ஐயர் என்கிற மோதிரம் நாராயணன். நாம் பழகிய சில கதாபாத்திரங்களை வாழ்வில் மறக்க முடியாது.
சிலர் முற்றிலும் வித்தியாசமாக இருப்பார்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? என்று நமக்கு தோன்றும். அவர்களிடம் கேட்டால், ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்கென்ன குறைச்சல்’ என்பார்கள். அது போல்தான் இவரும். வாரப்படாத தலைமுடி, ஷேவ் செய்யப்படாத முகம், அயர்ன் பண்ணப்படாத சட்டை, அழுக்கோ வெளுப்போ ஏதோ ஒரு வேட்டி.
ஒரு சாதாரண ஹவாய் செருப்பு. ஓடினால் சத்தம் கேட்கிற ஒரு பழங்கால சைக்கிள். அதன் இருக்கை நீளமாக இருக்கும். அதை அப்போது ‘ஏரோபிளேன் சீட்’ என்பார்கள். அந்த சைக்கிளில்தான் அவர் அனைத்து இடங்களுக்கும் செல்வார். திருமணம் ஆகாதவர். உறவினர்கள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. சொந்த ஊர், திருநெல்வேலி பக்கம் எங்கேயோ என்று நினைக்கிறேன்.
அவரும் திரைத்துறையில்தான் இருந்தார். டப்பிங்கில் சின்ன சின்ன வாய்ஸ்களை பேச அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதை பேசி விட்டு, கிடைக்கிற சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். நான் படிப்பை முடித்துவிட்டு திரைத்துறைக்கு டப்பிங் பேச வந்த காலத்தில், ஒரு ஸ்டூடியோவில் அவரை பார்த்தேன். அவருக்கு எதிரில் நின்று “வணக்கம் ” என்றேன். அவர் என்னை பார்த்து, “யாரு, பாஸ்கரா?” என்று கேட்டார். “ஆமாண்ணா” என்றேன்.
அவர் “திருந்திட்டியாடா?” என்று கேட்டார். நான் சிரித்துக் கொண்டு நின்றேன். அவர் பலரிடம் டப்பிங் கோ-ஆர்டினேட்டராக வேலை பார்த்தார். அதாவது அந்த காலத்தில் செல்போன் வசதி இல்லாததால், சம்பந்தப்பட்ட டப்பிங் கலைஞர்களுக்கு புரோக்கிராம் சொல்லிவிட்டு வரவேண்டும். அதற்கு அந்த சைக்கிளில் செல்வார். சைக்கிளை எவ்வளவு மெதுவாக ஓட்ட வேண்டுமோ, அவ்வளவு மெதுவாகத்தான் ஓட்டுவார்.
“ஏம்பா 10-ம் தேதியில இருந்து ஆரூர்தாஸ் சார் டப்பிங்பா. வந்திருப்பா” என்பார். அவர் ஐயர் என்றாலும் பிரமாண பாஷை ஏதும் பேசமாட்டார். “வீட்டில் யார் இருக்கிறாங்க?” என்றால், “கல்யாணம் காட்சி பண்ணிக்கல. அது அமையல. அப்படியே விட்டாச்சு. போன கழுதையை தேடறதுக்கும் ஆளில்ல, வந்த கழுதையை கட்டுறதுக்கும் ஆளில்ல” என்பார்.
இவர்தான் டப்பிங் பேசி முடிந்ததும் அனைவருக்கும் ‘கன்வேயன்ஸ்’ கொடுப்பார். அவர்கிட்ட வேண்டுமென்றே காலையில் போய், “அண்ணா, கன்வேயன்ஸ் ப்ளீஸ்” என்று கேட்பேன். அவரும் “ஷெல் வெயிட் ஆன்” என்பார். அவர் பேசும் ஆங்கிலம் சரியா தவறா என்று அவருக்கும் தெரியாது. கேட்கிற எனக்கும் (அப்போது) தெரியாது.
தினமும் எல்லா டப்பிங் ஸ்டூடியோவுக்கும் செல்லும் அவர், அங்கிருப்பவர்களுக்கு வணக்கம் வைப்பார். அவர்கள் பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். நன்றாக சாப்பிடுவார். உடைகள் அழுக்காக இருந்தாலும் உள்ளம் வெண்மையானவர். “டப்பிங்ல ஒருவார்த்தை பேசினாலும் சாப்பாடு, கன்வேயன்ஸ் கிடைச்சுரும். அதனாலதான் போறேன்டா. சினிமாவுல நான் இனிமே என்னத்த சாதிக்கப் போறேன்? எனக்கு அவ்வளவுலாம் திறமை கிடையாதுடா” என்பார்.
தான் பெரிய ஆளாக வரவில்லையே என்ற வருத்தம் அவருக்கு கொஞ்சமும் இல்லை. ஆனால் என்னை “நீ நல்லா வருவடா பாஸ்கரா, நல்லா பேசறடா, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குடா” என்பார். டப்பிங்கில் நடக்கும் காமெடியான விஷயங்களை அடிக்கடி பேசி சிரித்துக் கொள்வோம்.
அப்படி ஒரு முறை அவர், ஒரு டப்பிங் பேச சென்றார். அந்த காலத்தில் படங்களுக்கு அதிகம் டப்பிங் வேலை இருக்காது. ஏதாவது ஒரு போர்ஷன் மட்டும் டப் பண்ணுவார்கள். இவர் ஒரு வரலாற்று படத்துக்கு பேசப் போனார். போனதும், ஒரு சிப்பாய்க்குப் பேசச் சொன்னார்கள்.
படத்தில் மன்னன் சிப்பாய்களைப் பார்த்து கேள்விக் கேட்கிறான், “நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று. அதற்கு சிப்பாய் தலைவன், ‘ஆர்வார் செய்தரமனகி திவிகினதோம்’ என்று ஒன்றும் புரியாமல் ஏதோ ஒரு மொழியில் பேசியிருக்கிறான். அவர் அசிஸ்டென்ட் டைரக்டரிடம், “சார், நான் சிப்பாய்க்குத்தான பேசணும். அப்ப அந்த காட்சிக்கு ஏன் அவர் ஜதி சொல்லியிருக்காரு” என்று கேட்டார். “அது ஜதி இல்லை, எங்க விதி. ஒரு இந்திக்காரரை கொண்டு வந்தாங்க.
அவரு இப்படி பேசியிருக்காரு” என்று சொன்னார் அவர். பிறகு அவர் பேச வேண்டியதைக் கேட்டார், ‘‘அதில் ஆரவாரம் செய்தோம், அரண்மனைக்கு தீ வைக்க நினைத்தோம்” என்று இருந்தது. அதைத்தான் அந்த இந்திக்காரர் புரியாமல் பேசியிருந்தார். அதைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். பொடி போடும் பழக்கம் கொண்ட அவர், எப்போதாவது யாராவது வாங்கிக்கொடுத்தால், ஒரு பெக் மது குடிப்பார்.
அப்பாவி மனிதர். இவருக்கு பல நாடக நடிகர்கள் தொடர்பு உண்டு. திடீரென்று பத்து நாள் அவரை பார்க்க முடியாது. நாடகக் குழுவுடன் சென்று விடுவார். அவர் ஆருர்தாஸ் ஐயா யூனிட்டில் இருந்தபோது, நாங்கள் ‘டப்பிங் ஆர்டிஸ்ட்டுகள்’ எல்லோரும் சேர்ந்து பணம் போட்டு அவருக்கு புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தோம். ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு நான்தான் அந்த சைக்கிளை பாரிஸ் கார்னரில் போய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.
இவருக்கு ஏன் மோதிரம் நாராயணன் என்று பெயர் வந்தது என்றால், பத்து விரல்களிலும் அவர் மோதிரம் போட்டிருப்பார். விதவிதமான கற்கள் வைத்த மோதிரம் அவை. கட்டை விரலில் கூட மோதிரம் போட்டிருப்பவர் அவராகத்தான் இருப்பார். அதனால்தான் அவரை மோதிரம் நாராயணன் என்பார்கள். இதுபோன்ற கலர் கலர் கற்களால் தனக்கு அதிர்ஷ்டம் வரும் என்று நம்பிய அப்பாவி அவர்.
ஒரு முறை வரலாற்று படம் ஒன்றில் ஒரு ராஜாவுக்கு டப்பிங் பேசச் சொல்லியிருக்கிறார்கள். ராஜா வயதானவர். அவரது “யாரங்கே?” என்ற ஒரு வசனத்தை பேசிவிட்டார். அடுத்த வசனத்தை ராஜா நிறைய பேசவேண்டும். இவருக்கு பேச வரவில்லை. அப்போது கே.ஏ.வி.கோவிந்தன் என்ற ரைட்டர் இருந்தார். அவர் “பேசுங்க பேசுங்க” என்று சொன்னாலும் இவருக்கு வரவில்லை. “என்னங்க நீங்க ராஜாவை விடநிறைய மோதிரம் போட்டிருக்கீங்க. ஆனா, பேச மாட்டேங்கிறீங்களே?” என்றார்.
அப்படிப்பட்டவர், ஒரு நாள் திடீரென தவறிட்டார் என்று தகவல் வந்தது. அவர் வீட்டுக்குப் போனோம். அவர் கதவைப் பூட்டிவிட்டு வெளியே கிளம்பும்போது, “தண்ணீர் மோட்டார் போட்டோமே, ஆஃப் பண்ணலையே” என்று தோன்றியிருக்கிறது.
போய் அதன் சுவிட்சை அணைத்துவிட்டு, “டேங்கில் தண்ணி எவ்வளவு ஏறியிருக்குன்னு செக் பண்ணுவோம்” என்று பைப் வழியாக டேங்குக்கு ஏறியிருக்கிறார். அப்போது பைப் வழுக்கியதில் கீழே விழுந்து பின் தலையில் அடிபட்டு இறந்து விட்டார். நான் போய் கதறினேன். இப்போது நினைவுகளாகத் தங்கி விட்ட இவர்களோடு பழகியதெல்லாம் என் பாக்கியம்.
( திங்கள்தோறும் பேசுவோம்)