‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மதுரை கிராமத்து இளைஞனாகவும், சென்னை மாடர்ன் இளைஞனாகவும் 2 வேடங்களில் தினேஷ் நடித்துள்ள படம், ‘கருப்பு பல்சர்’. ரேஷ்மா வெங்கட், மதுனிகா, பிரின்ஸ் அஜய், மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கன்னுசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இன்பா பாடல் எழுதி இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை இயக்கியுள்ள முரளி கிரிஷ் கூறும்போது, “நான் இயக்குநர் ராஜேஷ் எம்.மிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள், அதை எப்படித் தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறோம். பரபரப்பு திருப்பங்களுடன் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். ஜன.30-ம் தேதி வெளியாகிறது” என்றார். இப்படக்குழு சென்னையில் செய்தியாளர்கள் முன்னிலையில் பொங்கல் விட்டுக் கொண்டாடினர்.