மகன் யாத்ரா நாயகனாக அறிமுகம் ஆவாரா என்ற கேள்விக்கு நடிகர் தனுஷ் பதிலளித்துள்ளார்.
ஏப்ரல் 30-ம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வில்தான், தனது மகன் யாத்ரா நாயகனாக அறிமுகம் ஆவாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் தனுஷ்.
அந்தக் கேள்விக்கு தனுஷ், “எனது சூழ்நிலை காரணமாக நான் 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். ஆனால், இப்போது யாத்ராவுக்கு 19 வயதுதான் ஆகிறது. இப்போதும் அவரை ஒரு சிறுவனவாகவே பார்க்கிறேன். அவர் எதிர்காலத்தில் என்னவாக போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை. அதை சொல்வதற்கு இப்போது ஏற்ற காலமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யாத்ரா நாயகனாக அறிமுகமாகும் படத்தை தனுஷ் இயக்கி, தயாரிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. இந்தப் பதிலின் மூலம் இந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தனுஷ் என்பது தெளிவாகிறது.