சரண் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அமர்க்களம்’. அஜித் குமாரின் 25-வது படமான இதில் ஷாலினி நாயகியாக நடித்தார். இதில்தான் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். இப்படத்தில் ரகுவரன், நாசர், வினு சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்தனர்.
ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு பரத்வாஜ் இசை அமைத்தார். அவர் இசையில், ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...’, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ உள்பட பாடல்கள் சூப்பர் ஹிட்டாயின. இப்போதும் இந்த படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படம் டிஜிட்டலில் நவீனப் படுத்தப்பட்டு ஏப்.24-ல் மீண்டும் வெளியாகிறது.
அஜித்- ஷாலினி ஜோடியின் திருமண நாளை முன்னிட்டு இந்தப்படம் மீண்டும் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனத்தின் கார்த்திக் வெங்கடேசன் இப் படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.