‘மாமன்னன்’ படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகிறது. அத்துடன் ‘என்டிஆர்30’ படத்தின் முதல் தோற்றம் மற்றும் டோவினோ தாமஸின் ‘ஏஆர்எம்’ பட டீசர் என நாளை அப்டேட்டுகள் குவிய உள்ளன.
மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. நாயகியாக கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் நாளை (மே19) வெளியாகிறது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை வடிவேலு பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
என்டிஆர் 30: நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணையும் புதிய படம் ‘என்டிஆர் 30’ என அழைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை நாளை (மே 19) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஆர்எம்: டோவினோ தாமஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’ (Ajayante Randaam Moshanam). பீரியட் ட்ராமாவாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்குகிறார். கேரளாவில் 1900, 1950 மற்றும் 1990 என வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இப்படத்தின் கதையில் 3 கதாபாத்திரங்களில் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். கிருத்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் நாளை (மே 19) வெளியாகிறது. டீசரை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மாலை 7 மணிக்கு வெளியிடுகிறார்.
இது தவிர, முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும், ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்ரெய்லரும் நாளை வெளியாகிறது.