'சென்னையில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2' பட நிகழ்ச்சி 
தமிழ் சினிமா

'விஜய் ஆண்டனி இயக்குநர் ஆனது வரவேற்க வேண்டிய முடிவு' - சசி

செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள படம், ‘பிச்சைக்காரன் 2’. காவ்யா தாப்பர், ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெரேடி, ஜான்விஜய், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படம் பற்றிய நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சசி, ‘ஜெயம்' ராஜா, நடிகர் மன்சூர் அலி கான், கோவிந்த மூர்த்தி, பாடலாசிரியர் அருண்பாரதி, தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் சசி பேசும்போது, "‘பிச்சைக்காரன் 2’ படம் மூலம் விஜய் ஆண்டனி இயக்குநராவது வரவேற்க வேண்டிய முடிவு. ஏனென்றால், 'பிச்சைக்காரன்' கதையை, விஜய் ஆண்டனிக்கு முன்பு நான்கைந்து ஹீரோக்களிடம் சொன்னேன். அவர்கள் அதைப் பிச்சைக்காரனின் கதையாகத் தான் பார்த்தார்கள். விஜய் ஆண்டனி மட்டும்தான் பணக்காரனின் கதையாகப் பார்த்தார். அந்தப் படத்திற்காக பல இடங்களில் பிச்சை எடுத்துள்ளார். ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களில் என்ன மாதிரி இசை வேண்டும் என அவர் கேட்டபோது எனக்கே குழம்பியது. அவர் கேட்ட கேள்விதான், முதல் 20 நிமிடத்திற்கான கதையை மாற்றியது. இசையமைப்பாளராக 'நூறு சாமிகள்' பாட்டையும் வெற்றிகரமாக தந்தார். நான் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். புதுமுக இயக்குநராக விஜய் ஆண்டனியை வரவேற்பதில் மகிழ்ச்சி" என்றார்.

விஜய் ஆண்டனி பேசும்போது, “பிச்சைக்காரன் திரைப்படம், இயக்குநர் சசி எனக்குப் போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் சென்டிமென்ட் இருந்ததோ, அதைப் போல 2-வது பாகத்தில் அண்ணன்- தங்கை சென்டிமென்ட் இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT