தமிழ் சினிமா

“கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும்” - சாமி தரிசனத்திற்கு பின் நடிகை நமீதா பேச்சு

செய்திப்பிரிவு

சென்னை: “கர்நாடகாவில் நிச்சயம் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும்” என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிகையாக அறிமுகமான நமீதா தற்போது அதிலிருந்து விலகி இருக்கிறார். பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், அண்மையில் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டார். இந்நிலையில், நடிகை நமீதா தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோயில் 1008 தாமரை பூக்களால் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் என்னுடைய குழந்தையுடன் கொண்டாடுகிறேன். கர்நாடகாவின் பெங்களூருவில் நான் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டேன்.

கர்நாடகா மக்கள் பாஜகவிற்கு உற்சாகமான வரவேற்பை அளிக்கின்றனர். அதனால் இந்தத் தேர்தலில் தனிப்பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதுவே எனது வேண்டுதலாக இருந்தது. அண்ணாமலை சிங்கத்தைப்போல செயல்படுகிறார். அவர் வருகைக்கு பிறகு பாஜக புத்துணர்வு பெற்றுள்ளது.

என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருவோரம் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு அளிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய அன்பும் வாழ்த்துகளும் எனக்கு போதுமானது’’ என்றார்.

SCROLL FOR NEXT