சென்னை: இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் பர்னபி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பாரத் இந்து முன்னணி மத்திய சென்னை மாவட்டத் தலைவரான இவர், அபிராமபுரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில் கடந்த 30-ம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில், விடுதலை சிகப்பி என்பவர், இந்து மத கடவுள்களான ராமர், சீதை, அனுமன், லட்சுமி ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசியுள்ளார்.
ஒட்டு மொத்தமாக இந்து மதத்தை மிகவும் இழிவுபடுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளார். விடுதலை சிகப்பியின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக, இதை நான் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எனவே அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
போலீஸ் விசாரணை: இந்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், விடுதலை சிகப்பி இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார், விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து,மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை சிகப்பி, பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.