தமிழ் சினிமா

செப்.27-ல் ஸ்பைடர் வெளியீடு: தயாரிப்பாளர் தகவல்

ஸ்கிரீனன்

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்' திரைப்படம், செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

'ஸ்பைடர்' படத்தின் பிரதான காட்சிகள் படப்பிடிப்பு அனைத்துமே முடிந்துவிட்டது. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதில் நாளை(ஜூலை 5) முதல் ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் ஒரு பாடலைக் காட்சிப்படுத்தவுள்ளார்கள். மற்றொரு பாடலை இம்மாத இறுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

செப்டம்பர் 29-ம் தேதி 'வேலைக்காரன்' படத்துக்குப் போட்டியாக வெளியாகும் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், 2 நாட்கள் முன்னதாக செப்டம்பர் 27-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரும் என தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்து வருகிறார்கள்.

'ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் மகேஷ்பாபு.

SCROLL FOR NEXT