சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் உதயநிதி கையில் கத்தியும், வடிவேலு கையில் துப்பாக்கியும் உள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.
முன்னதாக, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1-ம் தேதி (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.