நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’. இந்தப் படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. படத்தை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி என தெரிகிறது. அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, பிஜூ தீவுகளில் நடைபெற்றது. பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.