மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நைட்’ பட ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘காலா’, ‘ஜெய்பீம்’ படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த மணிகண்டன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘குட் நைட்’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி?: தூங்கும்போது குறட்டைவிடும் பழக்கம் கொண்ட நாயகன் தன் வாழ்நாளில் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. டீசர் தொடக்க காட்சியிலேயே குறட்டையால் அலுவலகத்தில் மாட்டிக்கொள்ளும் நாயகனின் காதலும் குறட்டையால் பிரியும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ‘நான் விட்ட குறட்டைல என் காதல் கோட்டை சுக்கலா நொறுங்கிடுச்சு’ என்ற வசனம் படம் காமெடி கலந்து உருவாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது. படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.