தமிழ் சினிமா

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - திரை விமர்சனம்

இந்து டாக்கீஸ் குழு

மூன்று வெவ்வேறு நிமிடங்களில் தொடங்கும் ஒரு பயணத்தால் ஏற்படும் மூன்று விளைவுகளைக் காமெடி கலந்து கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் சிம்பு தேவன்.

சிவன், பிரம்மன், நாரதர் ஆகிய மூவரின் கலந்துரையாடலில் தொடங்குகிறது படம். வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு முக்கியமானது, ஒரு நிமிடம் மாறினால் எப்படி விதி மாறுகிறது என்கிற விவாதப் பின்னணியில் கதையின் திசை பூலோகத்திற்குத் திரும்புகிறது.

தமிழும் (அருள்நிதி) இசெபெல்லாவும் (அஷ்ரிதா ஷெட்டி) காதலர்கள். குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற நினைக்கும் இசெபெல்லாவின் தந்தைக்கு இந்தக் காதல் பிடிக்கவில்லை. இசெபெல்லாவுக்கு வேறொரு பையனோடு திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார்.

தொழில் போட்டி காரணமாக இந்தத் திருமணத்தை நிறுத்தத் துடிக்கிறார் நாசர். மணப்பெண்ணைக் கடத்தினால் 30 லட்சம் தருவதாகத் தமிழிடம் நாசர் கூறுகிறார். காதலியைக் கடத்தப் பணம் கிடைக்கிறது என்றால் தமிழுக்குக் கசக்கவா செய்யும்? அதோடு, தன் அம்மாவின் மருத்துவச் செலவுக்கான பணத்துக்கும் ஆச்சு என்று கடத்தலில் இறங்குகிறான்.

பண நெருக்கடியில் இருக்கும் நண்பர்கள் மலர் (பிந்து மாதவி), ராமானுஜம் இசக்கி (பகவதி பெருமாள்), ஐசக் ஆகியோருடன் இணைந்து கடத்தலை மேற்கொள்ளத் திட்டமிடுகிறான் தமிழ்.

கடத்தும் திட்டத்துடன் சரியாகக் காலை 8:59 மணிக்குக் கிளம்புகிறார்கள். ஒரு நிமிடம் தாமதமாகக் காலை 9 மணிக்குத் தொடங்கினால் முடிவு என்ன நடந்திருக்கும்? காலை 9.01 மணிக்கு நடந்திருந்தல் முடிவு என்னவாக இருந்திருக்கும்? இந்த மூன்று வெவ்வேறு பயணங்களாக ஊர்கிறது

படம்.

ஜெர்மானியப் படமான ‘ரன் லோலா ரன்’ தாக்கத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு படத்தை சிம்பு தேவன் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் உருவாகக்கூடிய வெவ்வேறு சாத்தியப்பாடுகள் குறித்த படைப்பூக்கம் மிகுந்த காட்சிகள் இருக்கும். இங்கே சின்னச் சின்ன வித்தியாசங்கள், சிரிப்பு வெடிகள், அலுப்பூட்டும் காட்சிகள், வியக்கவைக்காத திருப்பங்கள் ஆகியவைதான் இருக்கின்றன. டீக்கடை முதலாளி, போலீஸ் அதிகாரி, பேச்சிலர்களை வெறுக்கும் பெரியவர், பாட்டி, டிராஃபிக் போலீசார், காய்கறிக் கடைக்காரர், செக்யூரிட்டி, தர்ப்பூசணி விற்கும் பெண் என வழியில் எதிர்ப்படும் மனிதர்கள் மூன்று பயணத்திலும் சிற்சில வித்தியாசங்களுடன் பயணப்படுகிறார்கள். எந்தப் பயணமும் சுவாரசியமாக இல்லை.

மூன்று விதமான சாத்தியக்கூறுகளிலும் திரைக்கதையின் பயணம் விறுவிறுவென இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் மிக மெதுவாக நகர்வதால் அலுப்பு ஏற்படுகிறது. பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. காமெடிப் படம்தான், அதற்காக இப்படியா என எண்ணவைத்துவிடுகிறது. மேடை நாடகங்கள் போன்ற வசனங்கள் மட்டுமே அவ்வப்போது சிரிக்கவைக்கின்றன.

கணந்தோறும் மாறும் தலைவிதி என்னும் கருத்தை வைத்துக்கொண்டு வலுவாகத் திரைக்கதை அமைக்கத் தவறியிருக்கிறார் சிம்பு தேவன்.

தமிழுக்கும், இசெபல்லாவுக்கும் இடையே மலரும் காதல் காட்சிகள் மேம்போக்காக இருக்கின்றன. காதலனுக்கு அடிபட்டிருக்கும்போது காதலி உதவும் காட்சி மட்டும் பரவாயில்லை. சர்ச்சில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் தமிழும், ராமானுஜ இசக்கியும் அடிக்கும் காமெடி கலகலப்பை ஏற்படுத்தவில்லை. “அது என்ன புதுசா வாங்குன செல்போனா எல்லாரிடமும் தூக்கி தூக்கி காட்டுற?” என்பதுபோன்ற வசனங்கள் மட்டுமே ஈர்க்கின்றன.

சீரியஸாக இருக்கும் காட்சிகளில் அருள்நிதியின் நடிப்பு பரவாயில்லை. உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களில் தடுமாறுகிறார்.

அஷ்ரிதா ஷெட்டிக்கு எந்த வேலையும் இல்லை. சில காட்சித் துணுக்குகளாகத் தோன்றி மறைகிறார். பிந்து மாதவி படம் முழுவதும் வருகிறார். இவருக்குக் காதல் காட்சி எதுவும் இல்லை. அதிகம் பேசாமல் நடித்திருக்கிறார். சாலையில் ஓடுவது, பைக் ஓட்டுவது என்று துடிப்பாகத் திரையில் தோன்றுகிறார். பகவதி பெருமாள் வசனம் பேசும் விதமும் முகபாவங்களும் சிரிக்கவைக்கின்றன. துணுக்குத் தோரணங்களினூடே கட்டப்பட்ட பலவீனமான கடத்தல் நாடகம்.

SCROLL FOR NEXT