மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'துப்பறிவாளன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'கத்தி சண்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'துப்பறிவாளன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 14ம் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருக்கிறது.
ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். "8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பிரசன்னா.
அரோல் குரலி இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் மிஷ்கின்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'அஞ்சாதே' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பிரசன்னா என்பது நினைவுக்கூறத்தக்கது.