வனப்பகுதி நிறைந்த மலையூரில் ‘பெட்டி கேஸ்’ பிரபலமாக வலம் வருகிறார் ஆதி (நிஷாந்த் ரூஷோ). திரையுலகில் பிரபல கதாநாயகியாக இருக்கும் யாமினியின் (காயத்ரி) கணவர் மாறன் (விவேக் பிரசன்னா), ஆதியின் கிராமத்துக்குள் அடைக்கலம் தேடி நுழைகிறார். அந்த நேரத்தில் அவரைக் கொல்வதற்காகச் சிலர் தாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து மாறனைக் காப்பாற்றப் போராடுகிறார் ஆதி. மாறனைக் கொல்லத் துடிப்பவர்கள் யார்? என்ன காரணம்? ஆதியால் அவரைக் காப்பாற்ற முடிந்ததா, இல்லையா என்பது கதை.
மிளகு விளையும் காட்டில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக, காவல் நிலையத்துக்கு தகவல் வருவது, அந்த இடத்துக்குச் செல்ல, போலீஸுக்கு வழி காட்ட நாயகனை அழைத்துச் செல்வது, கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டவர் உயிருடன் இருப்பது, அவரைக் காப்பாற்றுமாறு மன்றாடும் பெண்ணின் தொலைபேசி அழைப்பை, நாயகன் நம்புவது என விறுவிறுப்பாகத் தொடங்குகிறது படம்.
ஆனால், மாறனைக் கொலை செய்யும் ‘நோக்கம்’ மிக பலகீனமாக இருப்பதால் இரண்டாம் பாதியில் நிகழும் உயிர் பிழைப்பதற்கான ஓட்டமும் நாயகன் அவருக்காகப் போராடுவதும் சாரமிழந்துவிடுகின்றன.
யாமினி - மாறன் காதல் கதையை அழகுறச் சித்தரித்த இயக்குநர், எம்.எல்.ஏவுக்கும் யாமினிக்கும் இடையிலான பின்கதையை அந்தரத்தில் விட்டிருக்கிறார். காவல் நிலையத்தில் ஒரு நல்ல போலீஸ் - ஒரு கெட்ட போலீஸ், மயங்கிவிடும் அளவுக்குத் தாக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை எதுவும் தேவைப்படாமல் ஆசுவாசமாக நடந்து வருதல் போன்றவை, பலகீனமான டெம்பிளேட் சித்தரிப்புகள்.
‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தில் அறிமுக நாயகனாக நல்ல நடிப்பைக் கொடுத்த நிஷாந்துக்கு இதில் ஆக்ஷன் காட்சிகளைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை. எளிய பின்னணியிலிருந்து ஒரு வந்த ஒரு பெண்ணை கதாநாயகி ஆக்கி, அவரைத் திருமணம் செய்து, பின் மனக் குழப்பங்களால் துரத்தப்படும் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா கச்சிதமாகப் பொருந்துகிறார்.
யாமினியாக நடித்துள்ள காயத்ரி தனக்குக் கிடைத்த வெளியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘ராட்சசன்’ வினோத், கோடாங்கி வடிவேல் போன்ற திறமையான குணச்சித்திர நடிகர்கள் வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
மலை விவசாயம் நடக்கும் தனியார் காடுகளை அடர்ந்த வனம்போல் காட்டி பயமுறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஸ்வின் நோயல். ரஞ்சித் உன்னியின் பின்னணி இசை, இரண்டாம் பாதியின் ‘ஓட்ட’த்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறது.
வலுவான ஒருவரிக் கதையாக இருந்தும் வலுவில்லாத சம்பவங்களை வைத்து எழுத்தப்பட்ட சுமாரான திரைக்கதையால், தன்னைப் பருந்து என வெற்றுக் கற்பனை செய்துகொண்டு, தத்தித் தாவி சிறகடிக்கிறது இந்தக் குருவி.