இந்திய திரையுலகமே எப்போதும் ஆண்களைச் சார்ந்து இயங்கும் உலகம் என்ற ஒரு பெயர் உண்டு. முன்பு தமிழ் திரையுலகில் ஆண்களை மையப்படுத்தியே கதை நகரும். அதில் பெண்களை வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். இதில் பல முன்னணி நாயகிகளும் அடங்கும்.
ஆனால், 2017ம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் திரையுலகம் பெண்களை முன்வைத்து பல படங்கள் தயாரிப்பில் உள்ளன. இது ஒரு நல்ல முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதற்கு நயன்தாரா நடிப்பில் வெளியான 'மாயா' படத்தின் வெற்றி முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள். குறைந்த முதலீட்டில் வெளியான 'மாயா' திரைப்படம், வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்குமே வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது.
தற்போது நாயகர்களை முன்வைத்து படமெடுத்தால் அறிமுகப் பாடல் உள்ளிட்ட 4 பாடல்கள், 3 சண்டைக் காட்சிகள் என பெரும் பொருட்செலவில் தயாரிக்க வேண்டும். ஆனால், நாயகிகளை முன்வைத்து கதை எழுதும் போது குறைந்த பொருட்செலவில் செய்துவிட முடிகிறது.
டோரா: புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம். தினேஷ் ஒளிப்பதிவு செய்து வந்த இப்படத்துக்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளார்கள். நயன்தாரா, தம்பி ராமையா மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நயன்தாராவுடன் கார் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்று இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறம்: கோபி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பகுதி ராமநாதபுரத்தில் படமாக்கியுள்ளார்கள். கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து வரும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். நயன்தாராவுடன் 'காக்கா முட்டை' சகோதரர்கள் விக்னேஷ் - ரமேஷ், வேல. ராமமூர்த்தி, 'முண்டாசுப்பட்டி' ராமதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொலையுதிர் காலம்: சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் படம். யுவன் தயாரித்துவரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான 'ஹஷ்' படப் பின்னணியைக் கொண்டு உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும் போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் 'ஹஷ்' திரைக்கதை. இதில் நயன்தாரா நடிக்கிறார்.
பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் படம்: ஈராஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் பரத் ரங்காச்சாரி இயக்க இருக்கிறார். பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, மங்கோலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரான்ஸில் உள்ள பத்திரிகையாளராக நடிக்கவுள்ள நயன்தாரா, தனது அடையாளம் மற்றும் குடும்பத்தினரைத் தேடி பல இடங்களுக்கு பயணித்து இறுதியாக இந்தியா வருகிறார். முழுக்க த்ரில்லர் பாணியில் பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகவுள்ளது.
மகளிர் மட்டும்: 'குற்றம் கடிதல்' பிரம்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம். முழுக்க பெண்கள் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பிரம்மா. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கிரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜோதிகாவோடு லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
நாச்சியார்: பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம். ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முழுக்க ஜோதிகாவின் கதாபாத்திரத்தை முன்வைத்தே இப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் பாலா. இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
மோகினி: மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் 'மோகினி'. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. லண்டனில் 40 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் 20 நாட்களும், 10 நாட்கள் பாங்காக்கிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளது படக்குழு. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால், அவை முடிவு பெறுவதைப் பொறுத்து படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
கர்ஜனை: இந்தியில் அனுஷ்கா சர்மா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'என்.ஹெச் 10' படத்தின் ரீமேக். த்ரிஷா நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அமித் பார்கவா, வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, 'மதுரை' முத்து உள்ளிட்ட பலர் த்ரிஷாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 'கர்ஜனை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். புதுமுக இயக்குநர் சுந்தர் இயக்கி வருகிறார்.
18:18 - த்ரிஷா. ரிதுன்சாகர் இயக்கவுள்ள இப்படத்தில் சுமன், ராஜேந்திர பிரசாத், பிரமானந்தம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் த்ரிஷாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். மைன்ட் டிராமா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கவுள்ளது படக்குழு. 5 நட்சத்திர ஹோட்டலில் ஒர் இரவில் தவறான தகவலால் பெரும் அழிவை சந்திக்க நேரிடுகிறது. அதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறது படக்குழு.
குயின் ரீமேக்: இந்தி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது. தமன்னா நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தை ரேவதி இயக்க, சுஹாசினி மணிரத்னம் வசனங்களை எழுதியுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.