தமிழ் சினிமா

‘கடவுளுக்கும் மனுஷனுக்குமான பிரச்சினைதான் யானை முகத்தான்’ - இயக்குநர் ரெஜிஷ் மிதிலா

செய்திப்பிரிவு

யோகி பாபுவை, ‘யானை முகத்தான்’ படத்தில் விநாயகர் ஆக்கி இருக்கிறார் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா. மலையாளத்தில் ‘லால் பகதூர் சாஸ்திரி’, ‘வழிகுழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ ஆகிய படங்களை இயக்கி இருக்கும் அவர், இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

மலையாளப் படங்கள் இயக்கிட்டு, தமிழ்ப் படம் பண்ண என்ன காரணம்?

எனக்குத் தமிழ்ப் படங்கள் பிடிக்கும். தமிழ்ல இயக்கணும்னுதான் முதல்ல இருந்தே ஆசை. அதை நோக்கித்தான் என் பயணம் இருந்தது. ஆனா, அதுக்கான விஷயங்கள் சரியா அமையல. அதனால மலையாளத்துல சில படங்கள் இயக்கினேன். இப்ப நானே தயாரிச்சு இந்தப் படத்தைத் தமிழ்ல இயக்கி இருக்கேன்.

இதுல யோகிபாபு வந்தது எப்படி?

நடிகர் ரமேஷ் திலக் என் மலையாளப் படத்துல நடிச்சார். அவர் இந்த ‘யானை முகத்தான்’ கதையைக் கேட்டதும், இதை தமிழ்ல பண்ணினா, யோகிபாபு இந்த கேரக்டருக்கு பொருத்தமா இருப்பார்னு சொன்னார். அவரே, யோகிபாபுவையும் அறிமுகப்படுத்தினார். கதையைக் கேட்டதும் உடனே நடிக்கிறேன்னு சொன்னார் யோகிபாபு. இப்படித்தான் அவர் இந்த படத்துக்குள்ள வந்தார்.

‘யானை முகத்தான்’ பக்தி படத் தலைப்பு மாதிரி இருக்கே?

கதை அப்படியானதுதான். சென்னையில ஆட்டோ டிரைவரா இருக்கிற ரமேஷ் திலக், தீவிரமான விநாயகப் பக்தர். எங்க பிள்ளையார் கோயிலைப் பார்த்தாலும் கும்பிடாம, உண்டியல்ல காசு போடாம போகமாட்டார். அவ்வளவு பக்தி. ஆனா, கொஞ்சம் பொய், பித்தலாட்டம்னு இருக்கிறவர். அவர் முன்னால வந்து, ‘நான் விநாயகர்’னு அறிமுகமாகிறார், யோகிபாபு. அவர் நம்பமாட்டார். இன்னைக்கு நம்ம முன்னால ஒருத்தர் நின்னு, ‘நான்தான் கடவுள்’னு சொன்னா, யாராவது நம்புவாங்களா? இதுதான் கதை. அதை நம்ப வைக்க அந்தக் கடவுள் என்ன பண்றார்னு திரைக்கதைப் போகும்.

காமெடி படமா?

காமெடி மாதிரி தெரிஞ்சாலும் உணர்வுபூர் வமான விஷயங்கள் கதையில இருக்கும். மக்களுக்கான விஷயத்தை ஃபேன்டஸியா சொல்லியிருக்கோம். யோகிபாபு ரெண்டு கேரக்டர் பண்ணியிருக்கார். ரெண்டுமேரசிக்கும்படியா இருக்கும். யோகிபாபுவோட சிறப்பான நடிப்பையும் இதுல பார்க்கலாம்.வாழ்க்கையின் அடிமட்டத்துல இருந்துவந்தவர் அப்படிங்கறதால, அவ ருக்கு உணர்வுகளை வெளிப்படுத்தறது எளிமையா வருது.

சென்னையில நடக்கிற கதையா?

முதல் பாதி சென்னையில நடக்கும். அடுத்தப் பாதி ராஜஸ்தானுக்குப் போயிரும். அது ஏன் அப்படிங்கறதுக்கு காரணம் இருக்கு. அதோட, கதையில சில சஸ்பென்ஸ் விஷயங்களும் இருக்கும். அது கண்டிப்பா ரசிகர்களுக்குப் புதுசா இருக்கும்.

இந்தி நடிகர் உதய் சந்திரா நடிச்சிருக்காராமே?

ஆமா. 80-கள்ல இந்தியில ஹீரோவா நடிச்சவர். ‘தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்’ கூட. இதுல சிறப்பான கேரக்டர் பண்ணியிருக்கார். கூடவே கருணாகரன், ஊர்வசி, ஹரீஷ் பெரேடி, குளப்புள்ளிலீலான்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.

யோகிபாபுவை மீண்டும் இயக்கப் போறீங்களாமே?

உண்மைதான். இந்தப் படம் அடுத்த மாசம் ரிலீஸ் ஆகுது. அது முடிஞ்சதும் யோகிபாபு நடிப்புல இன்னொரு படம் பண்றேன். அதுல அவரை இன்னும் நல்லா பயன்படுத்தணும்ங்கற ஆசை இருக்கு. அட்வென்சர் படம் அது. சிரபுஞ்சி, மேகாலயாவுலதான் கதை நடக்கும். அதை ரிலீஸ் பண்ணிட்டு இதுக்கு ரெடியாகணும்.

SCROLL FOR NEXT