ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘சொப்பன சுந்தரி’. சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தை விவேக் ரவிச்சந்திரன், பாலாஜி சுப்பு தயாரித்துள்ளனர். இதன்மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார், சென்னையை சேர்ந்த அஜ்மல் தஹ்சீன்.
அவர் கூறியதாவது: ஏற்கெனவே ‘நாம்’ என்ற வெப் தொடருக்கு இசை அமைத்திருக்கிறேன். ‘சொப்பன சுந்தரி’ காமெடி படம் என்பதால் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக அமைத்திருக்கிறேன். இதில் இடம்பெற்றுள்ள ‘பணக்காரி...’ என்ற முதல் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் பாராட்டினர். அதனால் மற்ற பாடல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
காமெடி படங்களுக்கு இசை அமைப்பது அழகான சவால். வேறொரு வெப் தொடருக்கு கமிட் ஆகிவிட்டதால், இந்த படத்தின் பின்னணி இசையை நான் அமைக்க இயலவில்லை. அடுத்தடுத்த படங்களில் நானே பின்னணி இசையும் அமைப்பேன்.
படத்தின் கதை என்ன கேட்கிறதோ, அதற்கு தகுந்த இசையை கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். சினிமாவில் இசை அமைப்பாளர்கள் அதிகம் அறிமுகமாவது ஆரோக்கியமான விஷயம்.
சுயாதீனப் பாடல்களும் அதிகம் கவனம் பெறுகின்றன. திரைப்படங்களில் பாடல்கள் குறைந்துவிட்டது பற்றி கேட்கின்றனர். இப்போது ‘வியூவ்ஸ்’ முக்கியமாகிவிட்டது என்பதால், ரசிகர்களை திரும்ப திரும்ப கேட்க வைக்கும் விதமாக பாடல்களை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இசை அமைப்பாளர்களுக்கு இருக்கிறது.