தமிழ் சினிமா

காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத் - விஜய்யின் ‘லியோ’ அப்டேட்

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விஜய்யின் ‘லியோ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சஞ்சய் தத் தனது ஷெட்யூலை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகி இருக்கும் சஞ்சய் தத், இதில் முதன்மை வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். கடந்த மார்ச் 11-ம் தேதி ‘லியோ’ படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது சஞ்சய் தத் காஷ்மீரில் தனது ஷெட்யூலை நிறைவு செய்துள்ளார். அடுத்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள உள்ளார். இது தொடர்பாக ‘லியோ’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நன்றி சஞ்சய் தத். பணிவான மனிதரான உங்களின் நடிப்பை மிக அருகிலிருந்து பார்த்து ஒட்டுமொத்த குழுவும் ரசித்தது. வழக்கம் போல அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள். சென்னை ஷெட்யூலில் மீண்டும் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம்” என பதிவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT