‘அரும்புமீசை குறும்புபார்வை', 'வெண்ணிலா வீடு', 'விசிறி' படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். சிறிய இடைவெளிக்குப் பிறகு 2 படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு கதை-திரைக்கதை எழுதியுள்ள அவர், சகுந்தலா டாக்கீஸ் வழங்கும் தனது, மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புதிய படத்தைத் தயாரித்து இயக்குகிறார். இதில், ‘அருவி’ மதன், நாயகனாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க, ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
படம் பற்றி இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம் கூறும்போது, “இது முழுக்க நகரம் சார்ந்த கதை. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சுவாரசியமான உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகியிருக்கிறது. இருபது நாட்களில் படத்தை முடிக்கும் திட்டத்துடன் பணியை தொடங்கி இருக்கிறேன். மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்றார்.