இணையத்தில் பாடப்படும் கரோக்கி செயலியான ஸ்மூலில் குறிப்பிட்ட பாடல்களைப் பாட பணம் வசூலிக்கப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கப்பட்டுள்ளன.
தனக்கு சொந்தமான பாடல்களைப் பாடி யாரும் பணம் வசூலிப்பதை இளையராஜா விரும்பாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிடத்தக்க இணைய செயலிகளில் ஒன்றான ஸ்மூல், இசை ரசிகர்கள் திரைப் பாடல்களை சொந்தமாகப் பாடிப் பதிவிடப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அந்த செயலியில் சில பாடல்களை மட்டுமே இலவசமாகப் பாடிப் பதிவு செய்யமுடியும். மற்ற பாடல்களுக்கு மாதத்துக்கு ரூ.110 என்ற கட்டண அளவில் ஸ்மூல் செயலி வசூலித்து வருகிறது.
இதனால் இளையராஜாவின் நீண்ட கால உழைப்பால் விளைந்த பாடல்களைப் பாட அந்நிறுவனம் விலை வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஸ்மூல் பாடகர்கள் தன்னுடைய பாடல்களைப் பாடத் தடை விதித்துள்ளார் இளையராஜா. அத்துடன் இத்தனை நாட்களாகப் பாடப்பட்ட இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் ஸ்மூல் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துப் பேசும் இளையராஜாவின் சட்ட ஆலோசகர் ஈ.பிரதீப் குமார், ''இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பி ஸ்மூல் தளத்துக்கு ஈ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
நாங்கள் ரசிகர்களின் மகிழ்ச்சிக்குத் தடை போட விரும்பவில்லை. அதே நேரத்தில் இளையராஜாவின் பாடல்கள் வணிக நோக்கத்துக்காக விற்பனை செய்வதை அனுமதிக்கமுடியாது. அவரின் 35 வருடக் கடின உழைப்பை யாரும் சுரண்ட அனுமதிக்க முடியாது.
எத்தனையோ ரசிகர்கள் யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பாடிப் பதிவேற்றி வருகின்றனர். ஆனால் அவர்களை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதன்மூலம் பணம் சம்பாதிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
இந்த காப்புரிமை பிரச்சினை இளையராகாவுக்கு மட்டுமல்ல, அனைத்து உழைப்பாளிகளுக்குமே பொருந்தும். எங்களின் இ- மெயிலுக்கு ஸ்மூல் நிறுவனம் அளிக்கும் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அவர்களின் பதிலைப் பொருத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.
ரசிகர்கள் வருத்தம்
இந்நிலையில் இளையராஜாவின் பாடல்கள் நீக்கப்பட்டதற்கும், வருங்காலத்தில் ஸ்மூல் தளத்தில் அவரின் பாடல்களைப் பாட தடை விதிக்கப்பட்டதற்கும் இசை ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.