மேடையில் அமைதியை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று 'விழித்திரு' பத்திரிகையாளர் சர்ச்சை குறித்து கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு மேடையிலிருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, கிருஷ்ணா, விதார்த் உள்ளிட்ட படக்குழுவினரையும் சமூக வலைதளத்தில் கடுமையாக சாடத் தொடங்கினார்கள்.
இது குறித்து கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சுயமரியாதை இருப்பவனாக, ஒழுக்கமாக நடப்பவனாக, கடந்த சில வருடங்களாக ஒரு பெண் குழந்தையின் கல்விக்கு உதவுபவனாக நான் இருந்து வருகிறேன். மேடையில் எனது அமைதியை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் சமம் என்பதை மதிப்பவன் நான். முதலில் ஒரு நகைச்சுவையாக ஆரம்பித்தது சட்டென தீவிர வசையாக மாறி அவமதிப்பாகிவிட்டது. எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் குறித்து நாங்கள் யாரும் எதுவும் செய்திருக்க முடியாது.
என்னைப் பொறுத்தவரையில் டி.ஆர் போல ஒரு மூத்த நடிகர் பேசுவதை மறிப்பது சரியான மேடை நாகரீகம் ஆகாது. அந்த மேடையில் இருந்தவர்கள் அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் தன்ஷிகாவை பற்றி சொன்ன அவமரியாதையான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது. ஆண், பெண் என யாருக்கு நேர்ந்திருந்தாலும் அது அவமரியாதையே. அந்த நேரத்தில் யாராவது அவருக்கு ஆட்சேபணை தெரிவித்திருந்தால், ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தேவையில்லாத குழப்பமான சூழலும், விவாதமும் வந்திருக்கும்.
துறையில் மூத்தவர்கள் இளையவர்களை மன்னித்து அவர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்புகிறேன். நாம்தான் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியும்.
இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்