தமிழ் சினிமா

தவறாக சித்தரித்தால் சட்டரீதியான நடவடிக்கை: ஹாஜி மஸ்தானின் மகன் ரஜினிக்கு கடிதம்

ஸ்கிரீனன்

தவறாக சித்தரித்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஹாஜி மஸ்தானின் மகன் ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் '2.0' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மே 28ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று தகவல்கள் வெளியானது.

இது குறித்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இயக்குநர் ரஞ்சித் எனது தந்தையைப் பற்றிய கதையை சினிமாவாக எடுப்பதாகவும், அதில் நீங்கள் நடிக்கவிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் வாயிலாக அறிந்தேன்.

எனது தந்தையை நிழல் உலகதாதா மற்றும் கடத்தல்காரர் போன்று சித்தரித்துப் படம் எடுக்கக்கூடாது. அவரை எந்தவொரு நீதிமன்றமும் குற்றவாளி என்று கூறவில்லை. அவரைப் பற்றிய படமொன்றால் என்னிடம் வாருங்கள். அவருடைய முழுக்கதையையும் உங்களுக்குச் சொல்கிறேன்.

அவரது வாழ்க்கையை எனக்கும் சினிமாவாக எடுக்க ஆசையுள்ளது. ஆகையால், அவரை நீங்கள் தவறாக சித்தரித்துப் படம் எடுத்தால், தங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இப்படம் ஹாஜி மஸ்தானின் கதை அல்ல என்று இயக்குநர் ரஞ்சித் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT