சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வில் மறைந்த நடிகர் மயில்சாமி கலந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுமுதல் சிறிய பெரிய வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மயில்சாமி தொகுத்து வழங்கி இருக்கிறார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட, குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாதுறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்ட மயில்சாமி சிவராத்திரையை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். பின்னர் கோவிலில் பாடவும் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.