தமிழ் சினிமா

விஜய் - அட்லீ பட அப்டேட்: 65% படப்பிடிப்பு நிறைவு

ஸ்கிரீனன்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சுமார் 65 சதவீதத்துக்கும் மேலாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை - வசனம் எழுத, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார்.

சத்யராஜ், வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, உள்ளிட்ட பலர் இப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பணிகள் குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, "படப்பிடிப்பை வேகப்படுத்தியுள்ளோம். விஜய் - நித்யாமேனன் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன. விஜய் - காஜல் அகர்வால் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இம்மாத இறுதியில் படக்குழுவினர் சென்னை திரும்பிவிடுகிறார்கள். ஜுன் முதல் வாரத்தில் சென்னையில் விஜய் - சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்புக்கு திட்டமிட்டுள்ளோம். அதோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.

மேலும், மேஜிக் நிபுணராக விஜய் நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. அது மிகவும் சிறிய பகுதி தான். விஜய் பிறந்த நாளான ஜுன் 22-ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.

இன்னும் முழுமையான படப்பிடிப்பு முடிவு பெறாத நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் மற்றும் தொலைக்காட்சி உரிமையை சுமார் 11 கோடிக்கு கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அட்லீ படத்தை முடித்தவுடன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.

SCROLL FOR NEXT