தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது இயக்குநர் விஜய் உருவாக்கும் 'கரு'. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஜெயம் ரவி, சைஷா சைகல், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வனமகன்'. விஜய் இயக்கி தயாரித்துள்ளார். ஜுன் 23-ம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'வனமகன்' படத்தைத் தொடர்ந்து, மாதவன் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமானார் விஜய். இது 'சார்லி' மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காகும். இப்படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
'சார்லி' ரீமேக் தள்ளிப் போவதால் அதற்கு முன்பாக 'கரு' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார் விஜய். குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் சிறு முதலீட்டில் இப்படம் உருவாகி வருகிறது.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்கி வருகிறார் விஜய். தெலுங்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாக செளரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'சார்லி' தமிழ் ரீமேக்கிற்காக சாய்பல்லவி கொடுத்த தேதிகளை, அப்படியே இப்படத்துக்கு உபயோகித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார் இயக்குநர் விஜய்.