தமிழ் சினிமா

கொடை: திரை விமர்சனம்

செய்திப்பிரிவு

ஆவணக் கட்டணம் என்கிற பெயரில்ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம்கொடுத்ததாக, தன்னிடம் கடன் வாங்க வருகிறவர்களைக் கதற விடுகிறார் அஜய் ரத்னம். அவர் தலைமையிலான மாபியா குழுவின் இந்த நூதன மோசடி பகீர்உணர்வைக் கொடுத்தாலும் தர்க்கத்துடன் இருப்பதால் எடுபடுகிறது.

அதேநேரம் கதாநாயகன் இந்தக் குழுவிடம் ஏமாறப் போகிறார் என்று எளிதாக ஊகித்துவிடவும் முடிகிறது. ஏமாற்றியவர்களை நெருங்கி, பணத்தை மீட்கும் நாயகனின் போராட்டம் எண்பதுகளின் வணிக சினிமாவை பிரதி செய்த நாடக வறட்சியுடன் இருப்பதால் ‘என்ன கொடுமை சரவணா இது?’ என்று திரையரங்கில் புலம்புகிறார்கள்.

முதல் பாதிப் படத்தை, பாஸ்கருக்கும் பவித்ராவுக்கும் இடையில் முகிழும் காதல் தருணங்களாக, அவற்றுக்கு நகைச்சுவையும் இசையும் தூவி நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். துரதிஷ்டவசமாக ரோபோ சங்கரின் ‘அடல்ட் காமெடி’ காதல் காட்சிகளுக்குப் பெரும் திருஷ்டிப் பொட்டாகிவிடுகிறது. அவர், படப்பிடிப்பில் நடித்தது போதாதென்று, ‘டப்பிங்’ மூலம் ‘மைண்ட் வாய்ஸ்’ போல் உபரியாகப் பேசியிருக்கும் உப்புக்கும் பெறாதவற்றை இயக்குநர் எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை.

ஏமாற்றுக் குழுவின் தலைவரை மிகக் கொடூரமான ஆளாகச் சித்தரித்துள்ள காட்சியில் திரையரங்கில் பெரும்சிரிப்பலை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் கே.ஆர்.விஜயா, கதாநாயகியின் அப்பாவாக வரும் நாகேஷின் புதல்வர் ஆனந்த் பாபு ஆகிய இருவரையும் தலா 2 காட்சிகளில் ஒட்ட வைத்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் என்கிற சிறந்த நடிகரை‘உருவக்கேலி’ செய்து வீணடித்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் கூட மன்னித்துவிடலாம். ‘கொடை’ என்று தலைப்புவைத்து, கொடைக்கானலைக் கதைக்களமாக்கிய இயக்குநர், காட்சிகளின்வழியாக கொடைக்கானலை நிலவெளிக் காட்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அதுவும் மிஸ்சிங்.

பெரும் ஆறுதல், கார்த்திக் சின்கா, அனயா ஆகியோரின் இளமை துள்ளும் நடிப்பும் சுபாஷ் கவியின் இசையும்தான். கார்த்திக் சின்காவுக்கு நடிக்கவும் நன்றாக நடனம் ஆடவும் வருகிறது. அமைதியான அழகால், அளவான நடிப்பால் ஈர்த்துவிடுகிறார் நாயகியாக நடித்துள்ள அனயா.

இரு பொருள் தரும் தலைப்புக்கு பொருத்தமான கதையை யோசித்த இயக்குநர், எதைத் தவிர்த்து எதை சேர்த்திருக்க வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் போனதில் ‘கொடை’யின் குளிர் அத்தனை சிலிர்ப்பாக இல்லை.

SCROLL FOR NEXT