“வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்... நம்மைப்போல்தான்” என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உடல் நலம் பெற்று வரும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். அண்மையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக்பீக் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்தது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து விஜய் ஆண்டனி தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், “வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான்.யாதும் ஊரே யாவரும் கேளிர்.” என பதிவிட்டுள்ளார்.