மணி (கவின்), சிந்து (அபர்ணா தாஸ்) இருவரும் காதலர்கள். திருமணத்துக்கு முன்பே தாய்மை அடையும் சிந்து, கருவைக் கலைக்க மறுக்கிறார். இதனால் இருவரும் பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்கின்றனர். வறுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் இருவருக்கும் மனஸ்தாபம் முற்றுகிறது. குழந்தையைப் பெற்றதும் சிந்து பெற்றோருடன் செல்ல, குழந்தையைத் வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறான் மணி. பிறகு என்ன ஆகிறது? மணியும் சிந்துவும் இணைந்தார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.
விடலை வயதின் பொறுப்பின்மையில் ஆழ்ந்திருக்கும் இளைஞன், தனித்து வாழ்வது, ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பது ஆகியவற்றின் மூலம் பொறுப்பும் சுயசார்பும் மிக்க மனிதனாக உருவெடுப்பது எனும் சிந்தனையை படமாக்கி இருப்பதற்காக இயக்குநர் கணேஷ் கே.பாபுவைப் பாராட்டலாம். சினிமாத்தன கிளிஷேக்களை நம்பாமல் கதையின் தேவை, கதாபாத்திரங்க ளின் உணர்வுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து இயல்புக்கு நெருக்கமாக திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார், இந்த அறிமுக இயக்குநர்.
பாடல்கள், நகைச்சுவை, சண்டைக் காட்சி என வெகுஜன சினிமா அம்சங்கள் அளவாகவும் அழகாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எமோஷனல் காட்சிகள் எழுதப்பட்ட விதமும் அவற்றில் நடிகர்களின் பங்களிப்பும் படத்துக்குப் பெரிய பலம். ஆனால் படத்தின் தொடக்கத்தில் இருந்தே தர்க்கம் சார்ந்த கேள்விகள் எழுந்துகொண்டே இருப்பது பெரும் பிரச்சனை. நாயகி மாணவியாக இருந்தும் கருவைக் கலைக்க வேண்டாம் என்று முடிவெடுப்பது கருக்கலைப்புக்கு எதிரான பிற்போக்குச் சிந்தனையை வலுப்படுத்துவதாக உள்ளது. பெண்கள் குறித்த ஆண் மையப் பார்வை சார்ந்த சில வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
வறுமையில் திண்டாடும் நாயகனும் நாயகியும் அரசு மருத்துவமனையை ஏன் நாடவில்லை என்ற கேள்வி எழுகிறது. குழந்தைப் பிறந்ததும் நாயகனும் நாயகியும் பிரிவதற்கும் பிரிந்த பின் சந்திக்காமல் இருப்பதற்கும் எந்தவலுவான காரணமும் இல்லை. இரண்டாம் பாதி, ஐடி அலுவலக அலப்பறைகளால் சற்று சுவாரசியமாக நகர்கிறது. ஆனாலும் அந்தக் காட்சிகளிலும் தர்க்கப் பிழைகள் தலைதூக்குகின்றன. இந்தக் குறைகளைக் கடந்து, உணர்ச்சிகரமான இறுதிக் காட்சி மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கிறது.
கவின், அபர்ணா தாஸ், குழந்தையாக வரும் இளன், கவினுக்குத் தோள்கொடுக்கும் பணக்கார நண்பராக நடித்திருக்கும் இளைஞர், அலுவலக சகா பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வு. நாயகனின் பெற்றோராக கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா இருவரும் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் தமது அனுபவ முத்திரையைப் பதிக்கிறார்கள். விடிவி கணேஷுக்கும் நீண்ட காலத்துக்குப் பிறகு கண்ணியமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுக்கு நல்வரவு. நான்கு பாடல்களும் திரைக்கதையின் தேவைக்கு அழகாகத் துணை புரிந்திருக்கின்றன. பின்னணி இசையிலும் குறைவைக்கவில்லை. ஒளிப்பதிவு, கலை இயக்கம் உள்ளிட்ட அம்சங்களும் நல்ல காட்சி அனுபவத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. குழந்தை வளர்ப்பு ஆண்களுக்குமான பொறுப்பு என்பதை வலியுறுத்தியிருக்கும் இந்தப் படத்தில் தர்க்கப் பிழைகளையும் பிற்போக்குப் பார்வைகளையும் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பான தாக்கத்தை உணர்ந்திருக்கலாம்.