ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க முன்வந்தது. 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' படத்தைத் தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மகேஷ்பாபுவை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்பட பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, 2017 தீபாவளி முதல் விஜய் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் படத்தின் பொருட்செலவு அதிகமாகவுள்ளதால் இதன் தயாரிப்பு பொறுப்பில் இருந்து லைகா நிறுவனம் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 'எந்திரன்' படத்துக்குப் பிறகு அரசியல் மாற்றங்களால், தயாரிப்பிலிருந்து விலகியிருந்தது 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்தின் மூலம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.