சென்னை அண்ணா சாலையில் உள்ள வர்த்தக சபை வளாகத்தில் இடம் கேட்டு தமிழ் திரையுலகின் சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகம் சென்னை அண்ணா சாலையில் உள்ளது. இங்குள்ள கட்டிடத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நீண்ட காலங்களாக இயங்கி வருகிறது.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் சங்கங்கள் இணைந்து தற்போது உள்ள வளாகம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் வளாகத்தில் 25 சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தக சபையின் செயற்குழு கூட்டமும், மதியம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், தொழிலாளர்கள் சம்மேளன சங்கத்தின் சார்பில் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து வர்த்தக சபை தலைவர் எல்.சுரேஷிடம் 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்துதர கடிதம் வழங்கினர். இந்தக் கோரிக்கைக்கு தயாரிப்பாளர் சங்கம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
தமிழ் பட உலகத்தின் அனைத்து சங்கங்களும் ஒரே இடத்தில் இயங்கினால், எங்கே என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாகப் பேசி தீர்த்து வைக்க முடியும் என்பதால் இந்த முடிவை சங்கங்கள் எடுத்துள்ளன. மேலும், மற்ற மாநிலங்களில் அனைத்து சங்கங்களின் ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அதே போன்று தமிழ் சங்கங்களும் ஒரே வளாகத்தில் இயங்க வேண்டும் என்று தங்களுடைய கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இயக்குநர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றுக்கு சொந்தக் கட்டிடம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது