நடிகை த்ரிஷா | கோப்புப்படம் 
தமிழ் சினிமா

14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா!

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘விஜய் 67’ படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் திரையில் இணைந்துள்ளார் த்ரிஷா.

தமிழ் திரைத் துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து வரும் புதிய படம் ‘தளபதி 67’ என அறியப்படுகிறது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வரும் நிலையில், அது குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக கடந்த சில தினங்களாக பகிர்ந்து வருகிறது.

அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தச் சூழலில், இந்தப் படத்தில் நடிகர் த்ரிஷாவும் பணியாற்றி வருவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படத்தில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவலையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்திருந்தது.

த்ரிஷா, விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். குருவி திரைப்படம் கடைசியாக கடந்த 2008-ல் வெளிவந்திருந்தது. அதன் பிறகு இருவரும் ‘விஜய் 67’-ல் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் - பாகம் 1-ல் த்ரிஷா, குந்தவையாக நடித்து அசத்தி இருப்பார். இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் - பாகம் 2 வெளிவர உள்ள சூழலில் அவர் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT