'பாகுபலி 2’ படத்துக்கு தமிழக ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் சாதனைகளை முறியடித்து திரையரங்குகளில் இப்படம் தொடர்ந்து ஹவுஸ் புல்லாக ஓடுவதால் மே 5-ம் தேதி வெளியாகவிருந்த ‘தொண்டன்’, ‘எய்தவன்’ ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டின் மொத்த வசூல் பட்டியலில், 5 நாட்கள் வசூலின் மூலமாக 2-வது இடத் தைப் பிடித்துள்ளது ‘பாகுபலி 2’. இன்னும் சில நாட்களில் இப்படம் மொத்த வசூல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் ‘பாகுபலி 2’ விரைவில் இணையவுள்ளது.
‘பாகுபலி 2’ திரைப்படம் இந்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது குறித்து திரையுலகப் பிரச்சினைகள் குறித்து கட்டுரைகளை எழுதி வரும் தனஞ்ஜெயனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
‘பாகுபலி 2’ படத்தின் வசூலைப் பற்றி இன்னும் சில நாட்களுக்குப் பேசிக்கொண்டே இருக்கலாம். இப்படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதற்கு என்ன காரணம் என்பதை யோசிக்கவேண்டும். பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு பேசும் அளவுக்கு இப்படத்தின் உருவாக்கம் அமைந்துள்ளது, இதற்கு முக்கிய காரணம். தமிழில் உருவான பல படங்களைப் பார்த்துவிட்டு அரங்குகள் மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்ட விஷயங்களை இன் னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என நினைப்போம். ‘பாகுபலி 2’ படத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு எண்ணமே தோன்றவில்லை.
திருட்டு விசிடி, கேபிள் டிவி உள்ளிட்ட பல விஷயங்கள் இருந் தாலும் இதன் பிரம்மாண்டத்தை அனைவருமே திரையரங்குக்கு சென்று பார்க்க விரும்பியுள்ளார்கள். படம் பார்ப்பவர்களை அப்படியே மகிழ்மதி நாட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்கள். அதற்கு இயக்குநர் ராஜமவுலியை வெகுவாகப் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என நினைத்து அவர் உருவாக்கியுள்ளார்.
வழக்கமாக வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களின் வசூல், திங்கள்கிழமை குறைந்துவிடும். ஆனால் ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் தமிழகத்தில் இன்னும் குறையவில்லை. திருட்டு விசிடி யில் படத்தைப் பார்த்தவர்கள் கூட அதன் பிரம்மாண்டத்தைக் காண திரையரங்குக்குச் செல் கிறார்கள்.
மற்றொரு முக்கியமான விஷ யம், இதன் கதை ‘மகாபாரதம்’, ‘ராமாயணம்’ ஆகியவற்றை ஒட்டியே உள்ளது. ஆகையால் அனைவருமே கதையைப் புரிந்து கொள்ள முடியும். இக்கதையில் பேண்டஸி கிடையாது. ராஜமவுலி கூறியுள்ள கதையை, ஆவணப் படம் போன்று சொல்லியிருக் கலாம். ஆனால், அனைத்து மக் களும் ரசிக்கும்படியாக காட்சிப் படுத்தியுள்ளார். காதல், காமெடி, பழிவாங்கல், நம்பிக்கை துரோகம் என அனைத்தையும் சேர்த்துத் திரைக்கதையை அமைத்துள் ளார். இப்படத்துக்கு ஒரு எதிர் பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் மீறி இப்படம் அமைந்தது. ஆகையால்தான் ரசிகர்களிடையே இப்படத்துக்கு இந்த அளவு வரவேற்பு கிடைத் துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘பாகுபலி 2’ திரைப்படம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப் பதால், ‘எய்தவன்’ படத்தின் விநியோகஸ்தரான சக்திவேலன், அப்படத்தின் வெளியீட்டை மாற்றியமைத்துள்ளார். இதுபற்றி அவரிடம் பேசிய போது, “15 ஆண்டுகளாகத் தமிழ் திரை யுலகில் இருக்கிறேன். இப்படி யொரு ரசிகர்கள் கூட்டம் எந்த வொரு படத்துக்கும் வந்ததில்லை. ‘எந்திரன்’ படத்துக்குக் கூட இவ்வளவு கூட்டம் கிடையாது.
‘படையப்பா’வுக்குப் பிறகு...
தமிழ் திரையுலகில் திரை யரங்குக்கு மக்கள் அதிகமாக வந்து பார்த்த படமாக ‘பாகுபலி 2’ இருக்கும் என்பதில் சந்தேக மில்லை. ‘படையப்பா’ படத் துக்குப் பிறகு, மக்கள் இவ் வளவு கூட்டம் கூட்டமாக வருவது ‘பாகுபலி 2’ படத்துக்குத்தான். சினிமாவுக்கே செல்லாத ரசிகர் களையும் இப்படம் திரையரங் குக்கு இழுத்து வந்துள்ளது. தமிழக விநியோகத்தில் கண்டிப் பாக இப்படம் சாதனைதான். முந்தைய அனைத்துச் சாதனை களையும் முறியடித்துவிடும்” என்றார்.
இந்நிலையில் இந்தியளவில் அதிக வசூல் செய்த ‘தங்கல்' படத்தின் சாதனையை ‘பாகுபலி 2’ முறியடித்து, இந்தியளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தும் என்று இந்தி திரையுலக வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.