தமிழ் சினிமா

மீண்டும் இணைகிறது ‘ராட்சசன்’ பட கூட்டணி!

செய்திப்பிரிவு

வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட்டடித்த ‘ராட்சசன்’ பட கூட்டணி மீண்டும் கைகோத்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. சைகலாஜிக்கல் - த்ரில்லர் படமான இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். முன்னதாக, ராம்குமார் - விஷ்ணு விஷால் இருவரும் இணைந்த முதல் படமான ‘முண்டாசுப்பட்டி’ படமும் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் கைகோத்துள்ளது. இருவரும் இணையும் புதிய படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Caption
SCROLL FOR NEXT