'கவண்' படத்தின் இறுதிக் காட்சிக்காக சுமார் 20 மணி நேரக் காட்சிகளை எடிட்டர் ஆண்டனியிடம் அளித்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வரும் படம் 'கவண்'. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு 'ஹிப் ஹாப்' தமிழா இசையமைத்து வருகிறார். ஜனவரியில் இப்படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் எடிட்டிங் பணிகளை ஆண்டனி கவனித்து வருகிறார். 'கவண்' க்ளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் சுமார் 20 மணி நேர காட்சிகளை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
இது குறித்து எடிட்டர் ஆண்டனி, " 'கவண்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக 20 மணி நேர காட்சிகள் அளித்திருக்கிறார்கள். எங்கு கட் பண்ணி, பேஸ்ட் பண்ணுவது எப்படி தயார் பண்ணுவது என தெரியவில்லை. ஆனால், சவாலாக இருக்கிறது" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
'கவண்' படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்தவுடன், வெளியீட்டு தேதியை முடிவு செய்ய படக்குழு தீர்மானித்துள்ளது.