தமிழ் சினிமா

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி மீண்டு வருகிறார்: தனஞ்ஜெயன் தகவல்

செய்திப்பிரிவு

“விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார்” என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது.

அந்தப் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனி காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில், பிரபல படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், விஜய் ஆண்டனியில் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார் என்கிற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். லங்காவியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பத்தினர் லங்காவி வந்து, அவருக்குத் துணையாக உள்ளார்கள். விரைவில் அவரை சென்னைக்கு அழைத்து வருவது குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள். விஜய் ஆண்டனி விரைவில் குணமாகி வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம்” என அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT