லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய்67’ படத்தில் நடிகர் மிஷ்கின் இணைந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன் சர்ஜா ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், “விஜய்யுடன் சண்டையிட்டு ஷூட்டிங்கிலிருந்து தான் வருகிறேன். விஜய்யுடன் எனது முதல் படம் ‘யூத்’ தான். இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மீண்டும் அவருடன் இணைகிறேன். விஜய் கொஞ்சமும் மாறவில்லை. சொல்லப்போனால் அவர் இன்னும் இளமையாகவும், ஹேன்ட்ஸமாகவும் மாறியிருக்கிறார்.
அன்று எப்படி ‘அண்ணா’ என்று அழைத்தாரோ இன்றுவரை அதையேத்தான் கடைபிடிக்கிறார். அவருடன் செம்ம சண்டை. ரத்தம் வரவழைக்கும் அடித்து சண்டையிட்டோம். லோகேஷ் கனகராஜ் சிறப்பாக படத்தை இயக்குகிவருகிறார். ஏ-க்கும் பி-க்கும் இடையிலான மூவ்மெண்டுகளை மட்டும் எடுக்கிறார். தேவையில்லாமல் எதையும் எடுப்பதில்லை. அதேபோல நடிப்பெல்லாம் சொல்லிக்கொடுப்பதில்லை. அவரது இயக்கம் எனக்கு பிடித்துள்ளது. படமும் சுவாரஸ்யமாக உருவாகிக்கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.