பொதுவாகவே இசைஞானி இளையராஜா ஒரு பாடல் பதிவின்போது, அந்தப் பாடலுக்கான தொடக்க மற்றும் இடையிசை குறிப்புகளை எழுதி முடித்தப் பிறகு அந்த ஸ்கோர் ஷீட்டில்தான் அந்தப் பாடலை பாடும் பாடகர்களின் பெயர்களை எழுதுவராம். அதேபோல் அந்தப் பாடலில் இசைக்கப்பட வேண்டிய இசைக்கருவிகள் என்னென்ன என்பது தொடர்பான விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்குமாம். அந்த ஸ்கோர் ஷீட்டை வைத்துதான் பாடகர்களும், இசைக் கலைஞர்களும் அழைக்கப்பட்டு பாடல் பதிவுகள் நடந்துள்ளன.
ராகதேவனுக்கு என்ன ஒரு தீர்க்கதரிசனம் இருந்திருந்தால், பல ஆண்டுகளைக் கடந்தும் பாடல் கேட்பவர்களின் மனங்களில் ஈரம் சொட்டச் செய்யும் உன்னதமான பாடல்களை இவர்கள்தான் பாட வேண்டும் அனுமானித்திருப்பார். குறிப்பாக, இந்தப் பாடல் 42 ஆண்டுகளுக்கு முன் வந்தது. இருந்தாலும், எப்போது கேட்டாலும் நம்மை ஈர்ப்பதற்கு, ராகதேவனின் இசையும், பாடலைப் பாட அவர் தேர்வு செய்த பாடகர்களும் மிக முக்கிய காரணம்.
கடந்த 1980-ம் ஆண்டு, இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நிழல்கள். படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. குறிப்பாக 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடல். பொதுவாக ஒரு பாடலைக் கேட்டால், முதலில் அது எந்தப்படம்? அப்புறம் யாரோட படம்? யார் நடித்தது? இப்படியாக நீளும் தேடல்களை மீறி இந்தப் பாடலை பாடியவர்கள் யார்? இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜாவின் இசையில் வேறு என்ன பாடல்களை பாடியுள்ளனர்? தனித்தனியாக என்னென்ன பாடல்களை பாடியுள்ளனர்? என்ற தேடலுக்கு அழைத்துச் செல்லும் தன்மைக் கொண்டது இந்த காம்போ.
இசைஞானியின் சகோதரரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் எழுதிய இந்தப் பாடலை தீபன் சக்ரவர்த்தி உமா ரமணன் இணைந்து பாடியிருப்பர். வயோதிகத்தை எட்டிவிட்ட இவர்களது குரலில் வந்த இப்பாடலுக்கு மட்டும் வயது குறைந்து கொண்டேதான் வருகிறது. தீபன் சக்ரவர்த்தியின் மென்மையை விட மென்மையாக இருக்கும் அந்த Bass டோனும், காயமின்றி மனதை கிழித்து உள்நுழையும் உமா ரமணின் Sharp டோனும் இணைந்த இந்த பாடல் எப்போது கேட்டாலும் பாடல் கேட்பவர்களை வசீகரிக்கும்.
இந்த பெருவெளி முழுவதும் நிரம்பிக் கிடக்கும் காற்றைப் போலத்தான் மனவெளி முழுவதும் நிரம்பியிருக்கிறது இளையராஜாவின் இசை. பாடல் கேட்பவர்களின் மனங்களின் துயரையும், வலியையும் அதிக தடிமனற்ற, நீண்ட நேரான நூற்றுக்கும் அதிகமான குதிரை வாலின் மயிர் கற்றைகளைக் கொண்டு செய்யப்பட்ட வயலின் Bow கொண்டு துடைத்தெறிகிறார் இசைஞானி. இந்தப்பாடலில் வரும் வயலின்களின் இசை பெருவள நாட்டின் கழனிகளைப் போல எப்போதும் பசிப்பிணி போக்குபவை.
வெறும் காற்றை இசையாக்கும் மாயங்களைக் கற்ற ஞானதேவன் இந்தப் பாடலின் தொடக்க இசையை காற்றிலிருந்துதான் தொடங்குவார். சுழன்றடித்த அந்த சூறாவளிக் காற்றை தனது ஒற்றை வயலினுக்குள் கொண்டுவந்து அதை லாவகமாகக் கட்டுப்படுத்தி, பிற வயலின்கள், வயலோ, செல்லோ, டபுள் பேஸ் உட்பட வயலின் குடும்பத்தையும் சேர்த்து பாடல் கேட்பவர்களின் மனங்களுக்குள் மிருதுவாக பெருங்காற்றை மெல்ல மெல்லக் கடத்திச் சென்று ஓரிடத்தில் பீறிட்டு வெளியேறச் செய்திருப்பார். அது பாடல் கேட்பவர்களின் மனதுக்குள் மத்தாப்பைப் போல பூத்து சிரித்திருக்கும். அந்த இடத்தில் வரும் வீணை இசைமூலம் இதயம் வருடும் ராகதேவன், வீணைக்கு பதில் சொல்லும் வகையில் புல்லாங்குழலை சேர்த்து, பாடல் கேட்பவர்களின் இதயம் நோக்கி ரத்தத்தைக் கொண்டு செல்லும் சிரைகளின் மேல் பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்திருப்பார். அங்கிருந்து தொடங்கும் பாடலின் பல்லவி.
"பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்" என்ற கவித்துவமான கங்கை அமரனின் தொடக்க வரிகள் அற்புதமானவை.
முதல் சரணத்துக்கு முன்வரும் தொடக்க இசை மேஸ்ட்ரோவால் மட்டும் இசைக்க முடியும். சரியாக பாடலின் 1 நிமிடம் 12-வது விநாடி தொடங்கி 2 நிமிடம் வரையிலான 88 விநாடிகள் இந்த இசை வரும். கீபோர்ட் தனது காதலைச் சொல்ல அதை சிறிதும் தயக்கமின்றி சம்மதித்து ஏற்றுக் கொள்கிறது வயலின். விருப்பு வெறுப்புகள், ஆசை கோரிக்கைகள், என கீபோர்டும் வயலினும் கொஞ்சியும் கெஞ்சியும் காதல் கொண்டு இரவுபகல் பேதமின்றி ஒன்றென கலந்திருக்க, தூரத்தில் இருந்து காற்றில் கலந்து வரும் புல்லாங்குழல் கொண்டு வந்து சேர்க்கிறது திருமண செய்தியை. அந்த இடத்தில் நாதஸ்வரம் இசைக்கப்பட்டிருக்கும் அழகே அழகு. அந்த நாதஸ்வரத்தின் ஓசை அதுவரை ஆர்ப்பரித்து அருவியாக கொட்டிய அனைத்து இசையையும் நிசப்தமாக்கிவிடும். இங்கிருந்து உமா ரமணன் முதல் சரணத்தை தொடங்கியிருப்பார்.
இந்தப் பாடலின் முதல் சரணத்தை,
"நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்" என்று எழுதியிருப்பார் கங்கை அமரன். இந்த வரிகள் வரக்கூடிய இடத்தைக்கூட பாடல் கேட்பவர்கள் ரசித்திருக்க வேண்டும் என்றுணர்ந்த இசைஞானி,உமாரமணன் ஒவ்வொரு வரிகளைப் பாடும்போது தீபன் சக்கரவர்த்தி ம்ம்ம்ம் என்று ஹம் பண்ண செய்திருப்பார். இதேபோல் இரண்டாவது சரணத்தை அவர் பாடும்போது உமாரமணனும் ஹம்மிங் செய்திருப்பார். இதெல்லாம் இசைஞானியால் மட்டுமே செய்ய முடிந்த சாத்தியம்.
பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் வயலின்கள், கீபோர்ட், கிடார், புல்லாங்குழல் எல்லாம் இசைக்கப்படும். இருந்தாலும் அந்த ஒற்றை வயலின் இசைக்கப்பட்டிருக்கும் விதம் தமனி வழியாக நுரையீரலுக்கு வரும் அசுத்த ரத்தம் சுத்திகரீக்கப்பட்டு நுரையீல் சிரை வழியாக சுத்த ரத்தமாக மீண்டும் இதயத்துக்கு செல்லும் தன்மைக்கொண்டிருக்கும்.
பாடலின் இரண்டாவது சரணம்,
"திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்" என்று எழுதப்பட்டிருக்கும். பொதுவாகவே வயலின்கள் தயாரிக்க பயன்படுத்த தேர்ந்தெடுக்கப்படும் மரங்களின் ஈரப்பதத்தைக் காக்க, 24 மணி நேரமும் குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் அறைகளில் ஆண்டு முழுவதும் பதப்படுத்தப்படுகின்றன.
அவைத் தவிர வலின் Bow-களை வளமைப்படுத்த ரொசின் தடவப்படுகிறது. இந்த ஈரத்தன்மை பாடல் கேட்பவர்களின் நெஞ்சங்களில் எப்போதும் இருக்கச் செய்வதற்காகவோ என்னவோ இசைஞானி வயலின்களைக் கொண்டு பாடல் கேட்பவர்களின் வலிகளை வதம் செய்கிறார். ராஜாவின் ராஜகீதம் தொடரும்.