'2.0' டப்பிங் பணிகள் திங்கட்கிழமை தொடங்கியது. ரஜினியின் ஈடுபாட்டைக் கண்டு ரசூல் பூக்குட்டி வியந்து பாராட்டியிருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவு பெற்றுவிட்டது. இன்னும் பாடல் காட்சிகளும் மற்றும் ஒரு சில காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. '2.0' படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்கிறேன் என்று அந்தப் படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கட்கிழமை காலையில் தெரிவித்திருந்தார்.
"நமது சூப்பர்ஸ்டாரின் ஈடுபாடும் திறமையும் இணையற்றது. ஒரே நாளில் மூன்று ரீல்கள் முடித்துவிட்டார். அவர் வேலை செய்வதைப் பார்த்து வியந்துவிட்டேன்" என்று மாலையில் தெரிவித்துள்ளர் ரசூல் பூக்குட்டி.
இந்தப் படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.